2013-02-08 15:54:53

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் இந்தியாவுக்கான ஒரு வாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்


பிப்.08,2013. தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னைத் திருத்தலம் மைனர் பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டதன் பொன்விழா, இந்திய இலத்தீன்முறை ஆயர்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கென, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni இவ்வெள்ளியன்று இந்தியாவுக்கான ஒரு வாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இச்சனிக்கிழமை திருச்சியிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் கர்தினால் Filoni, அன்று இரவு ஆயர்களோடு உணவருந்திய பின்னர் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இஞ்ஞாயிறன்று காலை ஆயர்களுக்கு உரை நிகழ்த்துவார். மாலையில், வேளாங்கண்ணித் திருத்தலப் பொன்விழாவை முன்னிட்டு புதிதாகக் கட்டப்பட்டுள்ள விடியற்காலை விண்மீன் ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைப்பார். ஆலயத்துக்கு முன்புறம் அமைக்கப்பட்டுள்ள முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் திருவுருவத்தையும் திறந்து வைப்பார்.
11ம் தேதி திங்களன்று சென்னையில் திருத்தூதர் தோமையார் கல்லறையைத் தரிசிப்பார். சென்னை-மயிலைப் பேராயர் இல்லத்தில் மதிய உணவு அருந்திய பின்னர், மாலையில் பேராலயத்தில் பொதுநிலையினர்க்கான கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கி வைப்பார்.
12,13,14,15 தேதிகளில் டெல்லி, ராஞ்சி ஆகிய நகரங்களில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 16ம் தேதி உரோம் திரும்புவார் கர்தினால் Fernando Filoni.







All the contents on this site are copyrighted ©.