2013-02-08 15:50:24

Elysee உடன்படிக்கைக்குத் திருத்தந்தை வாழ்த்து


பிப்.08,2013. கடவுளால் மனித இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ள இயற்கையான அறநெறிச் சட்டமும், நற்செய்தியால் வடிவமைக்கப்பட்ட மனித விழுமியங்களும் உரிமைகளும் ஓர் அரசியலுக்கு அடிப்படையாக அமைகின்றன என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
இத்தகைய அரசியலே, நீதிக்கும், அமைதிக்கும், மனிதக் குடும்பத்தின் முன்னேற்றத்துக்கும் உண்மையிலேயே சேவை செய்யும் எனவும் கர்தினால் பெர்த்தோனே கூறினார்.
பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே Elysee உடன்படிக்கை ஏற்பட்டதன் 50ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்கு, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கை, திருத்தந்தையின் பெயரில் வாழத்திய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
அரசியல் செயல்பாடுகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டதாய் இருக்க வேண்டும் என்றுரைத்த கர்தினால் பெர்த்தோனே, நாம் இதுவரை சாதித்தவைகளைப் புதிய சவால்களால் இழந்துவிடக் கூடாது என்றும், அமைதி என்பது, அரசியலின் செயல்பாட்டில் எப்போதும் இணைந்தே செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
இந்த 50வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள், பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் மக்களுக்கு இடையே ஒப்புரவையும் புரிந்துகொள்ளுதலையும் உருவாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த 18 ஆண்டுகளுக்குப் பின்னர் 1963ம் ஆண்டு சனவரி 22ம் தேதி ஜெர்மனியும் பிரான்சும், பாரிசின் Elysee அரண்மனையில் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டன. இந்த Elysee உடன்படிக்கை ஜூலை 2ம் தேதி அமலுக்கு வந்தது.







All the contents on this site are copyrighted ©.