2013-02-07 16:01:12

ஓரினத் திருமணம் சட்டமாகும்போது, பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கு மனசாட்சியின் அடிப்படையில் பல சவால்கள் உருவாகும் - பேராயர் Peter Smith


பிப்.07,2013. திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடைப்பட்ட உறவு என்பதை மனித குலம் துவக்கத்திலிருந்தே புரிந்துகொண்டு வந்திருப்பதையே திருஅவை தன் நிலைப்பாடாகக் கொண்டுள்ளது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் உதவித் தலைவர் கூறினார்.
ஓரினத் திருமணத்தைச் சட்டமயமாக்கும் ஒரு சட்ட வரைவுக்கு ஆதரவாக, பிரித்தானியப் பாராளுமன்றம் இச்செவ்வாயன்று ஒப்புதல் அளித்ததையடுத்து, பேரவையின் உதவித் தலைவர் பேராயர் Peter Smith, செய்தியாளர்களுக்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறினார்.
சமத்துவம் என்ற கருத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த விவாதம், திருமணத்திற்கு வேறுபட்ட ஓர் இலக்கணத்தை வகுத்திருப்பது, பிரித்தானிய சமுதாயத்தில் மேலும் பல சிக்கலான விளைவுகளை உருவாக்கும் என்று பேராயர் Smith கூறியுள்ளார்.
ஓரினத் திருமணம் சட்டமாகும்போது, மருத்துவ உலகில் பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கும், கல்வித்துறையில் பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கும் மனசாட்சியின் அடிப்படையில் பல சவால்கள் உருவாகும் என்று பேராயர் எச்சரித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.