2013-02-07 15:58:05

இக்கண்காட்சி, நம்பிக்கையைத் தூண்டுவதோடு, நம் உள்ளங்களில் உறையும் அழகியலையும் ஆழப்படுத்துகிறது - கர்தினால் பெர்தோனே


பிப்.07,2013. விவிலியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் கலைப் படைப்புக்களைத் திரட்டி, அவற்றை மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக அமைப்பது, நம்பிக்கையை வளர்க்கும் சிறந்த ஒரு முயற்சி என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
உரோம் நகரின் Castel Sant'Angelo என்ற நினைவு மண்டபத்தில், 'பேதுருவின் பாதை' என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு கண்காட்சியை, இப்புதன் மாலை திறந்துவைத்து உரையாற்றிய கர்தினால் பெர்தோனே, நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றுரைத்தார்.
உரோம் நகரில் தன் உதிரம் சிந்தி உயிர்துறந்த பேதுருவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, நம்பிக்கையைத் தூண்டுவதோடு, நம் உள்ளங்களில் உறையும் அழகியலையும் ஆழப்படுத்துகிறது என்று கூறினார் கர்தினால் பெர்தோனே.
கலைவழியாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் திருஅவை ஆற்றி வந்துள்ள பணிகளை மீண்டும் நினைவுறுத்தும் இக்கண்காட்சி, நம்மைப் பெருமிதம் அடையவைக்கிறது எனக் கூறி, தன் மகிழ்வையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே.
ஒன்பது நாடுகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில், நான்காம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டு முடிய ஒவ்வொரு நூற்றாண்டிலும் திருஅவையால் பாதுகாக்கப்பட்டுள்ள பல கலைப்பொருட்களும், ஆவணங்களும் இடம்பெறுகின்றன.
பிப்ரவரி 7, இவ்வியாழன் முதல், மே மாதம் முதல் தேதி முடிய நடைபெறும் இக்கண்காட்சி, உரோம் நகரின் முக்கிய நினைவுச் சின்னமான, Castel Sant'Angelo என்ற நினைவு மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.