2013-02-06 16:10:15

அன்னைமரியா திருத்தலங்கள் – Montichiari ரோசா அன்னைமரியா


பிப்.06,2013. இயேசுவின் தாயும், திருஅவையின் தாயுமாக இருக்கும் அன்னைமரியா, மறையுண்மைகளைத் தாங்கிய ஒரு ரோசா மலரோடு ஒப்புமைப்படுத்தப்படுகிறார். பண்டைக்காலத்தில் ரோசா மலர், புதிரான ஒன்றின் அடையாளமாகக் கருதப்பட்டது. தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் இந்த ரோசாவை உயிர்த்தியாகத்துக்கும்(சிப்ரியான் மறைசாட்சியத்துக்கும்) விண்ணுலகுக்கும்(புனித கலிஸ்துஸ்) உருவகமாகப் பயன்படுத்தி வந்தனர். விவிலியத்தின் சீராக் புத்தகத்தில், “பற்றுறுதியுள்ள மக்களே, நீரோடை அருகில் வளரும் ரோசாவைப்போன்று மலர்ந்து விரியுங்கள்”(சீராக்39,13)என்றும், “ஞானத்தின் புகழ்ச்சி பற்றிச் சொல்லும்போது, எங்கேதி ஊரின் பேரீச்சமரம் போலவும், எரிகோவின் ரோசாச்செடி போலவும்... நான் ஓங்கி வளர்ந்தேன்” (சீராக்24,14) என்றும், “தலைமைக் குரு சீமோன், முதற்கனிகளின் காலத்தில் மலரும் ரோசா போன்றும் திகழ்ந்தார்”(சீராக்50,08) என்றும், சொல்லப்பட்டுள்ளது. இங்கு சொல்லப்படும் பற்றுறுதியுள்ள இறைமக்கள், ஞானம், சீமோன் ஆகிய மூன்றும், அன்னைமரியாவின் பாவமில்லாதன்மையையும், இயேசுவின் பிறப்பில் அவரது பங்கேற்பையும் உயர்த்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரியா கன்னியாக இருந்து தாய்மைப்பேறு அடைந்ததே அவரது மறைபொருளான வாழ்வாகும்.
இவ்வாறு ரோசா மலர் அன்னைமரியாவின் வாழ்வோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இது குறித்து கடந்த வார நிகழ்ச்சியிலும் பார்த்தோம். இத்தாலியின் Montichiari Rosa Mystica அன்னைமரியா திருத்தலம், பியெரினா ஜிலி என்பவரோடு தொடர்புடையது. Montichiariல் வாழ்ந்த பியெரினா ஜிலி(Pierina Gilli) என்பவர் வாழ்விலும் ரோசா அன்னைமரியா தலைப்பட்டுள்ளார். Montichiari, வட இத்தாலியில், Brescia நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிறிய நகரமாகும். இந்நகரம், Po நதி பாயும் வளமான சமவெளிப் பகுதியில் இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளுக்கு முன்பக்கத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிறிய நகரத்தில் 1911ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த பியெரினா, அந்நகரத்திலிருந்த மருத்துவமனையில் தாதியாக வேலை செய்து வந்தார். பியெரினாவுக்கு அன்னைமரியா, 1947ம் ஆண்டிலிருந்து 1966ம் ஆண்டுவரை எட்டு தடவைகள் காட்சி கொடுத்திருக்கிறார். 1947ம் ஆண்டின் வசந்த காலத்தின் ஒருநாளில் Montichiari மருத்துவமனையிலுள்ள சிற்றாலயத்தில் பியெரினா செபித்துக் கொண்டிருந்தபோது அன்னைமரியா தோன்றினார். கண்களைக் கூசவைக்கும் ஒளிக்கு மத்தியில், இலேசான நீலநிற உடையுடன் கண்களில் கண்ணீர் மல்க மிகவும் சோகமாகத் தோன்றினார் அன்னைமரியா. அப்போது அன்னைமரியாவின் இதயம், மூன்று வாள்களால் ஊடுருவப்பட்டிருந்தது.
முதல் வாள், குருக்கள் தகுதியில்லாமல் திருப்பலி நிகழ்த்துவதையும், திருநற்கருணை வாங்குவதையும், இரண்டாவது வாள், குருக்கள் தங்களது குருத்துவ மற்றும் துறவு வாழ்வுக்குப் பிரமாணிக்கமில்லாமல் இருந்து அவ்வழைப்பைக் கைவிட்டு விடுவதையும், மூன்றாவது வாள், அவர்கள் விசுவாசத்தை மறுதலிப்பதையும் குறிக்கின்றன. எனவே செபம், தியாகம், தபம் ஆகிய செயல்களை, பியெரினா வழியாக கேட்டுள்ளார் அன்னைமரியா. 1947ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி இரண்டாவது தடவையாக, பியெரினாவுக்குத் தோன்றிய அன்னைமரியா, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் ஆகிய மூன்று அழகான ரோசா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்ணிற ஆடையில் இருந்தார். இம்மூன்று மலர்களும், முதன்முறை காட்சியில் தோன்றிய அந்த மூன்று வாள்கள் இருந்த இடத்தில் இருந்தன. அதற்கு நல்லதொரு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளை ரோசா செப உணர்வையும், சிவப்பு ரோசா தியாக உணர்வையும், மஞ்சள் ரோசா, தபம் மற்றும் மனமாற்ற உணர்வையும் குறிக்கின்றன.
பியெரினா தனக்குக் காட்சி கொடுக்கும் அந்த அழகான பெண் யாரென்று தெரியமால் இருந்தார். ஆதலால், இரண்டாவது காட்சியில் அவரிடம், தயவுசெய்து நீங்கள் யார் எனச் சொல்லுங்கள் எனக் கேட்டார். அப்போது அந்தப் பெண் புன்முறுவலுடன், “நான் இயேசுவின் தாய், உங்கள் அனைவருக்கும் தாய். அனைத்துத் துறவு சபைகளுக்கும் துறவு நிறுவனங்களுக்கும் இவ்வுலகின் குருக்கள் அனைவருக்கும் ஒரு புதிய அன்னைமரியா பக்தியை வழங்குவதற்காக நம் ஆண்டவர் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார். எனக்கு இந்தச் சிறப்பான வழியில் பக்தி முயற்சிகளைச் செய்யும் துறவு சபைகளுக்கும் துறவற நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பேன், இறையழைத்தல்கள் அதிகரிக்கச் செய்வேன், இறைமக்கள் மத்தியில் தூய வாழ்வுக்கானத் தேடல் நிறைவுறச் செய்வேன். ஒவ்வொரு மாதத்தின் 13ம் தேதியன்று மரியா நாளைச் சிறப்பிக்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு முந்தைய 12 நாள்களும் சிறப்புச் செபங்கள் சொல்ல வேண்டும். அவ்வாறு செய்யும் துறவு சபைகளுக்கும் துறவற நிறுவனங்களுக்கும் நிறைய அருளைப் பொழிவேன்” என்று சொன்னார்.
அப்போது பியெரினா ஏதாவது புதுமை நடக்குமா என்று அன்னைமரியாவிடம் கேட்டார். அதற்கு அன்னைமரியா, நீண்டகாலமாகத் தங்கள் அழைத்தலுக்குப் பிரமாணிக்கமின்றி வாழ்ந்து வரும் துறவிகள் தண்டனைகளையும், அடக்குமுறைகளையும் எதிர்நோக்குவார்கள் என்று கூறினார். இந்தக் காட்சி பற்றி விவரித்த பியெரினா, மரியா, மறைபொருளான, அகவாழ்வின் ஆசிரியர், கிறிஸ்துவின் மறையுடலின் தாய், அதாவது திருஅவையின் தாய் என்று சொன்னார். பியெரினாவின் இந்த விளக்கத்தை, திருத்தந்தை ஆறாம் பவுல், 1964ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி உறுதி செய்தார். மரியா, திருஅவையின் தாய் என்று அறிவித்தார்.
மீண்டும் அன்னைமரியா, Montichiari மருத்துவமனையிலுள்ள சிற்றாலயத்தில் 1947ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி பியெரினாவுக்குத் தோன்றினார். அச்சமயம் மருத்துவர்கள், பல பணியாளர்கள் மற்றும் மக்களும் கூடியிருந்தனர். அக்காட்சியின்போது அன்னைமரியா தான் இயேசுவுக்கும், மனித சமுதாயத்துக்கும், சிறப்பாக, இறைவனுக்குத் தன்னை அர்ப்பணிக்கும் ஆன்மாவுக்கும் இடையே இடைநிலையாளராக இருப்பேன் என்று கூறினார். மீண்டும் இதே ஆண்டு நவம்பர் 16, நவம்பர் 22, டிசம்பர் 7,8 ஆகிய நாள்களிலும் அன்னைமரியா பியெரினாவுக்குத் தோன்றினார். இந்தக் கடைசிக் காட்சி பங்குக் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த போது இடம்பெற்றது. Montichiariல் அன்னைமரியா காட்சி கொடுத்தபோது, தான் 'Rosa Mystica' என்ற பெயரில் போற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். இந்தக் காட்சிகளின்போது பல புதுமைகள் நடைபெற்றன. எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாமல் போலியோவினால் தாக்கப்பட்டிருந்த 6 வயதுச் சிறுவன், 12 ஆண்டுகளாக காச நோயால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு, 9 ஆண்டுகளாக ஒரு வார்த்தைகூடச் உச்சரிக்க முடியாமல் இருந்த 26 வயதுப் பெண், மனநலம் பாதிக்கப்பட்ட 36 வயதுப் பெண் போன்றோர் முழுமையாய்க் குணமடைந்தனர். இப்படி அங்கு நடந்த பல புதுமைகளைச் சொல்லலாம். இத்திருத்தலங்களில் இன்றும் புதுமைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
Montichiariவுக்கு அருகிலுள்ள Fontanelle என்ற ஊரில், 1966ம் ஆண்டு, ஏப்ரல் 17, மே 13, ஜூன் 9, ஆகஸ்ட் 6, ஆகிய நாள்களிலும் அன்னைமரியா பியெரினாவுக்குத் தோன்றினார். இந்தக் காட்சிகளின்போதும் பியெரினா, அன்னைமரியாவை யார் என்றும், அவர் என்ன விரும்புகிறார் என்றும் கேட்டுள்ளார். அதற்கு அன்னைமரியா, தனது பிள்ளைகளுக்கு, அன்பு, ஐக்கியம் மற்றும் அமைதியைக் கொண்டு வந்துள்ளேன். தனது பிள்ளைகள் பிறரன்புச் சேவைகள் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
Montichiari, Fontanelle ஆகிய இடங்களிலுள்ள திருத்தலங்களுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் சென்று அன்னைமரியாவிடம் அருள்வரங்களைப் பெற்று வருகின்றனர். தனது பிள்ளைகளின் நிலைமையை, தாயின்றி வேறு யார் நன்றாக அறிந்திருக்க முடியும்?








All the contents on this site are copyrighted ©.