2013-02-04 15:55:40

கற்றனைத்தூறும்..... புற்றுநோய்


உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானது புற்றுநோய். வயது வேறுபாடின்றி எல்லா வயதினரையும் தாக்கும் இந்நோயில், நுரையீரல், மார்பகம், தோல், வயிறு, நாக்கு, தொண்டை, கல்லீரல் என 200க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. ஒரு இரத்தப் பரிசோதனையில் 13 வகையான புற்றுநோய்களைக் கண்டுபிடிக்க முடியும். மனித உடலானது பல வகையான திசுக்களாலானது. இந்தத் திசுக்கள் வளர்ந்து, பிரிந்து, உடலை நலமாக வைத்துக்கொள்ளத் தேவையான அளவுக்கு, பல திசுக்களை உருவாக்குகின்றன. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய திசுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த திசுக்கள், இறக்கவேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள் அனைத்தும் கூட்டாக இணைந்து உடலில் கழலைகள் போன்ற ஒன்றை உருவாக்குகின்றன. இவை, தீங்கற்ற கழலைகள், தீங்கு விளைவிக்கும் கழலைகள் என இருவகைப்படும். தீங்குள்ள கழலைகள் புற்றுநோய் ஆகும். இக்கழலைகள் உடலில் கட்டுப்பாடற்று பெருகிவரும். மேலும் இதில் உருவாகும் திசுக்கள் மற்ற உறுப்புக்களிலுள்ள திசுக்களையும் அழித்துவிடும். மேலும், இத்திசுக்கள் இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும். நிணநீர் மண்டலம், இரத்த வெள்ளை அணுக்களை உடலில் பல பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் வேலையைச் செய்கிறது. இதில் தீங்குள்ள கழலைகளில் உருவான செல்கள் கலப்பதால் வெள்ளையணுக்கள் செல்லும் இடங்களில் புற்றுநோய் உருவாகிறது.
புற்றுநோய்க்கு, குறிப்பாக, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்களுக்கு முதல் எதிரி புகையிலை. இன்று உலகில், ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகளில் 13 விழுக்காட்டுக்குப் புற்றுநோய் காரணம். இந்நோயால் இறப்பவர்களில் 70 விழுக்காட்டினர், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவிக்கிறது. துவக்கத்திலேயே முறையான சிகிச்சை மேற்கொண்டால், 40 விழுக்காட்டு இறப்புக்களைத் தடுக்க முடியும். இந்தியாவில், ஆண்டுதோறும் ஏறக்குறைய 10 இலட்சம் பேர் புற்றுநோயால் தாக்கப்படுகின்றனர். மேலும், ஆண்டுக்கு 5 இலட்சம் பேர் வீதம் இந்நோயால் இறக்கின்றனர். 2015ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 7 இலட்சமாக உயரும், எனினும், சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மூன்றில் இரண்டு புற்றுநோய் இறப்புக்களைத் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நோயிலிருந்து பாதுகாப்பதற்கு, மதுபானம் மற்றும் புகையிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி அவசியம். சீரான உடல் எடையை கடைப்பிடிக்க வேண்டும். தூசியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
பிப்ரவரி 4, அனைத்துலக புற்றுநோய் தினம்.







All the contents on this site are copyrighted ©.