2013-02-04 16:11:06

கற்றனைத்தூறும்..... பச்சைத் தேயிலை


உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் பருகும் பானம் தேநீர். நான்காயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இது சீனாவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைச் சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்தமதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு800களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. அதன்பின்னர் தேயிலையின் பெருமை பரவத் தொடங்கியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரர்கள் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகமானது. 1840-50களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாகப் பயிரிடப்பட்டது. அதன்பிறகு தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா போன்ற பகுதிகளுக்கும் பரவியது. தேயிலை இலையின் அளவைப் பொருத்து அதன் தரம் பிரிக்கப்படுகிறது. தேநீரின் நிறத்தைப் பொருத்தும் வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை என, இது பிரிக்கப்படுகின்றது. பச்சைத் தேயிலை(Green Tea) மருத்துவக் குணம் கொண்டதாகவும் நோக்கப்படுகிறது. சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, வியட்னாம் உட்பட ஆசியாவின் பல பகுதிகளில் பச்சைத் தேயிலையிலிருந்து பருகப்படும் பச்சைத் தேநீர் பயன்படுத்தப்படுகிறது.
பச்சைத் தேயிலையின் பெயருக்கேற்றவாறு அதன் நிறம் பச்சையாக இருக்கும். நம் உடலிலுள்ள திசுக்கள் பல காரணங்களால் சேதம் அடைகின்றன. இந்த சேதத்தைக் கட்டுப்படுத்த நம் உடலில் இயற்கையாக ஆன்டிஆக்ஸிடண்ட் (Antioxidant) உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டு Kansas பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவின்படி, பச்சைத் தேயிலை, புற்றுநோய் மற்றும் பிற நோய்களிலிருந்து நமது திசுக்களை காப்பதில், வைட்டமின் C யைவிட 100 மடங்கும், வைட்டமின் E யைவிட 25 மடங்கும் சிறந்ததாக உள்ளது எனத் தெரிகிறது. பச்சைத் தேயிலை இருதய நோய்களிருந்து பாதுகாக்கவும், சுகாதாரமான பற்கள் மற்றும் ஈறுகளுக்கு உறுதுணையாகவும், சீரான ஜீரனத்திற்கும் உதவுகின்றது. இன்னும், புற்றுநோய், கொலஸ்ட்ரால் பாதிப்புக்களிலிருந்து உடலைக் காக்கின்றது. இதயத் துடிப்பைச் சீராக வைக்க உதவுகின்றது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, திடீரென உயர்வதைத் தடுக்கிறது. உணவைக் கெடச்செய்யும் நுண்கிருமியிலிருந்தும் ஒவ்வாமையிலிருந்தும் பாதுகாக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.