2013-02-04 15:58:30

'இலங்கையில் உரிமை மீறல் பொறுப்பேற்புக்கு எந்த முயற்சியும் கிடையாது'


பிப்.04,2013. சமூகத்தின் மீது தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்ற இலங்கை அரசு, 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பை ஏற்கவோ, ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவோ தவறிவிட்டது என்று 2013ம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
அரபு வசந்தத்துக்குப் பின்னரான நிலைமைகள் உட்பட, 90க்கும் அதிகமான நாடுகளில் கடந்த வருட மனித உரிமைகள் நிலவரம் குறித்து தனது 665 பக்க ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ள இந்த அமைப்பு, இலங்கையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் அங்கு மனித உரிமைகள் நிலவரங்களில் எவ்விதமான அடிப்படை முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.
சிறுபான்மைத் தமிழர்கள் மீது பாதுகாப்புப் படைகள் பெரிய அளவில் கைதுகள் மற்றும் சித்ரவதைகளை மேற்கொள்வதாகவும், பாலியல் வல்லுறவுகள் கூட மேற்கொள்ளப்படுவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு மார்ச் மாதத்தில் வரவிருக்கும் நிலையில், இலங்கை, அங்குள்ள மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்த நிறைய ஆற்றவேண்டியுள்ளது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.