2013-02-02 15:46:43

மெக்சிகோவில் எண்ணெய் நிறுவன வெடி விபத்தில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தையின் செய்தி


பிப்.02,2013. மெக்சிகோ நாட்டின் எண்ணெய் நிறுவனத் தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
மெக்சிகோ நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Jose Francisco Robles Ortega, அப்பேரவையின் பொதுச் செயலர் ஆயர் Eugenio Lira Rugarcia ஆகியோருக்குத் திருத்தந்தையின் பெயரில் செய்தி அனுப்பியுள்ளார் கர்தினால் பெர்த்தோனே.
இந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா நிறைசாந்தி அடைய, திருத்தந்தை செபிப்பதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கும் நாட்டினருக்கும் திருத்தந்தை, தனது செபம் நிறைந்த ஆறுதலைத் தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இவ்விபத்து குறித்து மெக்சிகோ நாட்டு ஆயர்களும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
54 அடுக்குகள் கொண்ட, மெக்சிகோவின் Pemex எண்ணெய் நிறுவனத் தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 25 பேர் பலியாயினர். இந்த Pemex நிறுவனம், உலக அளவில் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு, 25 இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மின்சார உபகரண அறையில், வாயு உற்பத்தியாகி, இவ்வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.