2013-02-02 15:33:24

பொதுக்காலம் - 4வது ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை." இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் இவ்வார்த்தைகள், இறைவாக்கினர்களைப்பற்றி சிந்திக்க நம்மை அழைக்கிறது. 'இறைவாக்கினர்கள்' என்ற சொல்லைக் கேட்டதும், 'ஓ, அவர்களா?' என்ற எதிரொலி நம் உள்ளத்தில் எழுந்திருக்கலாம். 'இறைவாக்கினர்கள்' – ‘அவர்கள்’ அல்ல... நாம்தான்! நாம் ஒவ்வொருவரும் பல நிலைகளில், பலச் சூழல்களில் இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதை நாம் முதலில் நம்பி, ஏற்றுக்கொள்ள வேண்டும்.
'இறைவாக்கினர்' என்றதும், அது நமது பணியல்ல என்று சொல்லி, தப்பித்துக்கொள்ளும் பழக்கம் நம் அனைவரிடமும் உள்ளது. பொதுநிலையினர், குருக்கள், துறவியர்... ஏன், திருஅவைத் தலைவர்கள் அனைவரிடமும் இப்பழக்கம் உள்ளதென்பதை நாம் மறுக்க முடியாது. இன்று, நேற்று எழுந்த பழக்கம் அல்ல இது. பழைய ஏற்பாட்டு காலத்திலும் இதை நாம் காண்கிறோம். 'நான் சொல்வதை மக்களிடம் சொல்' என்ற கட்டளை இறைவனிடமிருந்து வந்ததும், பல வழிகளில் தப்பித்து ஓடியவர்களை நாம் பழைய ஏற்பாட்டில் சந்திக்கிறோம். இறைவாக்கினர் எரேமியாவைப் தாயின் கருவிலிருந்தே தேர்ந்ததாகக் கூறும் இறைவன், உன்னை... அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் (எரேமியா 1: 17-19) என்று எரேமியாவுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் நம்பிக்கையைத் தருகின்றன... ஆனால், இவ்வாக்குறுதிகளை நம்பி பணிசெய்த எரேமியா, இறைவன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால், தான் மக்கள் முன் அவமானமடைய வேண்டியதாகிவிட்டது என்றும் புலம்புவதை நாம் காண்கிறோம் (எரேமியா 20:7).

இறைவாக்கினராய் மாற ஏன் இந்த பயம், தயக்கம்? இறைவாக்கினர், கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து, மறைந்து போக முடியாமல், தனித்து நிற்க வேண்டியவர்கள் என்பதே, இந்தப் பயத்தின் முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன். 'Dare to be one in a thousand' அதாவது, 'ஆயிரத்தில் ஒருவராய் வாழத்துணிதல்' என்ற தலைப்பில், Ron Rolheiser என்ற அருள்பணியாளர் எழுதிய ஒரு சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். சொந்த அனுபவம் ஒன்றிலிருந்து அவர் தன் சிந்தனைகளை ஆரம்பிக்கிறார்:

திருமணத்திற்குத் தயார் செய்யும் இளையோருக்கு வகுப்பு ஒன்றை நடத்தினார் அருள்பணி Rolheiser. திருமண வாழ்வு, பாலியல் உறவுகள் பற்றி விவிலியமும், கிறிஸ்தவக் கோட்பாடுகளும் சொல்லும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார் அவர். அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த இளையோர், அவ்வப்போது கேலியாகச் சிரித்தனர். அவர்களில் ஒருவர் எழுந்து, "Father, நீங்கள் சொல்வதையெல்லாம் ஏட்டளவில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், நடைமுறை வாழ்வில் இவை நடக்கக்கூடியதா? இன்றைய உலகில் யாரும் இவ்விதம் வாழ்வது கிடையாது. அப்படியே வாழ்வதாக இருந்தால், நாங்கள் ஆயிரத்தில் ஒருவராக அல்லது பல்லாயிரத்தில் ஒருவராக இருக்க வேண்டும்." என்று கூறினார். இளைஞர் சொன்னதை ஆமோதிப்பதுபோல் ஏனைய இளையோர் கரவொலி எழுப்பினர்.
அருள்பணி Rolheiser உடனே பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த இளைஞருக்கு அருகே, அவர் மணம் புரிய விரும்பிய பெண் அமர்ந்திருந்தார். அருள்பணி Rolheiser இளைஞரிடம், "நீங்கள் அந்தப் பெண்ணுடன் வாழ விரும்பும் மணவாழ்க்கை, எப்படி அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஆயிரக்கணக்கானோரின் திருமண வாழ்வு போல் அமைய விருப்பமா? அல்லது, ஆயிரத்தில் ஒன்றாக, தனித்து விளங்கும் திருமணமாக அமைய விருப்பமா?" என்று கேட்டார். இளைஞர் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக, "ஆயிரத்தில் ஒன்றாக, தனிப்பட்ட முறையில் எங்கள் திருமண வாழ்வு அமைவதை நாங்கள் விரும்புகிறோம்" என்று சொன்னார். "ஆயிரத்தில் ஒன்றாக நீங்கள் இருக்க விரும்பினால், கூட்டத்தோடு கூட்டமாய் உங்களால் கரைந்துவிட முடியாது!" என்று கூறினார் அருள்பணி Rolheiser.

அவர் சொன்னதை அனைவரும் ஏற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இருந்தாலும், அவர் சொல்ல எண்ணியதைத் தயங்காமல் சொன்னார். அந்த வகுப்பறையில் எழுந்த கேலிச் சிரிப்புக்களுக்குப் பணிந்துபோய், அவ்விளையோர் கேட்கவிரும்பிய வகையில் அருள்பணி Rolheiser பேசியிருந்தால், வகுப்பு முடிந்ததும் பலர் அவரைப் பாராட்டியிருப்பார்கள். ஆனால், Rolheiser சொல்ல நினைத்த உண்மைகளை எவ்விதப் பூச்சும், கலப்படமும் இல்லாமல் சொன்னார். இதுதான் இறைவாக்கினரின் பணி.

இன்றைய உலகம், அதிலும் சிறப்பாக விளம்பர, வர்த்தக உலகம் சொல்லித்தரும் மந்திரம்... தனித்திருந்தால், தலைவலிதான், எனவே, கூட்டத்தில் கரைந்துவிடு என்பதே. அதுவும் தற்போதைய கணனித் தொடர்பு வலைகள் உதவியுடன் அனைவரும் ஒரே வகையில் சிந்திக்கும்படி நாம் 'மூளைச்சலவை' செய்யப்படுகிறோம். இச்சூழலில், விவிலியத்தின்படி, நன்னெறியின்படி, குறிக்கோளின்படி வாழ்வது எளிதல்ல. அப்படி வாழ்வதால், நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயமே குறிக்கோள்களைக் கைவிட வைக்கிறது.

'ஊரோடு ஒத்து வாழ'வேண்டும் என்று குழந்தைப் பருவம் முதல் சொல்லித் தரப்படும் பாடங்கள் ஆழமாக மனதில் வேரூன்றிப் போகின்றன. அதுவும், நாம் ஒத்து வாழவேண்டிய ஊர் நமது சொந்த ஊர் என்றால் இன்னும் கவனமாக நாம் செயல்படவேண்டியிருக்கும். இத்த்கையச் சூழலைச் சந்திக்கிறார் இயேசு. தான் பிறந்து வளர்ந்த ஊராகிய நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில் தன் பணிவாழ்வின் கனவுகளைக் கூறினார் என்று சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக, இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்றுஎன்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.
ஆரம்பம் ஆழகாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து நடந்தது ஆபத்தாக இருந்தது. தன் சொந்த ஊரில் இயேசு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து இயேசு அங்கு நிகழ்ந்த பல காரியங்களை ஆழமாக அலசிப் பார்த்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல நெருக்கமான, அதேநேரம் சஙகடமான, உண்மைகளைச் சொன்னார் இயேசு. சங்கடமான உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தபோது, அவர்கள் மனதில் இயேசுவின் மீது இதுவரை இருந்த ஈர்ப்பு, மரியாதை, மதிப்பு ஆகியவைக் கொஞ்சம் கொஞ்சமாய் விடை பெற ஆரம்பித்தன.
‘இவர் யோசேப்பின் மகன்’ என்று இயேசுவின் பூர்வீகத்தை அவர்கள் அலசியபோது, அதை நினைத்து பாராட்டியதாக நற்செய்தி சொல்கிறது. ஆனால், பூர்வீகங்கள் அலசப்படும்போது, பல நேரங்களில் "ஓ, இவன்தானே" என்று ஏகவசனத்தில் ஒலிக்கும் ஏளனம் அங்கு வந்து சேரும்.
சாதிய எண்ணங்களில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், தமிழகத்தில் பூர்வீகத்தைக் கண்டுபிடிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்காக அல்ல; மாறாக, மற்ற தேவையற்ற குப்பைகளைக் கிளற என்பது நமக்குத் தெரிந்த உண்மை. சுடுகின்ற உண்மைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, சங்கடமாய் இருந்தாலும், இந்த உண்மையையும் சொல்லியே ஆகவேண்டும்.

உண்மை, கசக்கும், எரிக்கும், சுடும் என்று உண்மையின் பல விளைவுகளைச் சொல்கிறோம். உண்மை, பல வேளைகளில் நம்மைச் சங்கடப்படுத்தும்; நம் தவறுகளைத் தோலுரித்துக் காட்டும். உண்மையின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும்போது, ஒரு முக்கியமான அம்சத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை, விடுவிக்கும். உண்மை, மீட்பைத் தரும். உண்மை விளைவிக்கும் சங்கடங்களைச் சமாளிக்கமுடியாமல், பல நேரங்களில் உண்மையை மறைத்துவிட, அழித்துவிட முயற்சிகள் நடக்கின்றன. உண்மை பேசும் இறைவாக்கினர்களின் செயல்பாடுகளைப் பல வகைகளில் நிறுத்த முயன்று, எல்லாம் தோல்விகண்ட பின், இறுதியில் அந்த இறைவாக்கினரின் வாழ்வையே நிறுத்த வேண்டியதாகிறது. உண்மைக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு உண்டு.

இன்று நற்செய்தியில் இயேசுவுக்கும் அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்கமுடியாமல், அவர் சொந்த ஊரின் மக்களுக்கு, முக்கியமாக, தொழுகைக்கூடத்தை நடத்திவந்த மதத் தலைவர்களுக்கு ஏற்பட்ட கோபம், கொலை வெறியாகிறது. மதத் தலைவர்கள் அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இயேசுவை, கல்வாரி மலைக்கு அழைத்துச் சென்றவர்களும் மதத் தலைவர்கள்தான் என்பதற்கு ஒரு முன்னெச்சரிக்கையை நற்செய்தியாளர் லூக்கா இங்கு வழங்குகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இம்முறை இயேசு தப்பித்துக் கொள்கிறார். அவர் நம்மைப்போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், "இந்த அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி ஏச்சும், பேச்சும் பெற வேண்டும்? தேவையில்லை இவர்கள் உறவு" என்று இயேசு ஒதுங்கியிருப்பார். ஆனால், அன்று உண்மையை உலகறியப் பறைசாற்றத் துணிந்த இயேசுவின் மூச்சு, கல்வாரிப் பலியில்தான் அடங்கியது.

நம் இறுதிச் சிந்தனை... உயிரோடு இருக்கும்போது உண்மைகளைச் சொல்லமுடியாத எத்தனையோ நல்ல உள்ளங்கள் விட்டுச்சென்ற உண்மைகள், அவர்கள் இறந்த பின்னரும் வாழ்வதைக் காண்கிறோம். சென்ற ஞாயிறு அகில உலக தகன நினைவு நாளைக் கடைபிடித்தோம். நாத்சி படையினரால் தகனமாகி உயிரிழந்த Anne Frank என்ற 13 வயது சிறுமி, நாத்சி படையினர் பிடியில் சிக்குவதற்கு முன் ஈராண்டுகள் மறைந்து வாழ்ந்தார். அந்த ஈராண்டுகள் அவர் தன் 'டயரி'யில் எழுதியிருந்த எண்ணங்கள், அவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டன. அவர் 'டயரி'யில் எழுதியுள்ள ஓர் எண்ணத்துடன் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்கிறோம்:
"குறிக்கோள்கள், கனவுகள் நமக்குள் பிறக்கின்றன. ஆனால், நாம் வாழும் சூழல் இவற்றை சுக்குநூறாகச் சிதறடிக்கிறது. இந்த அவல நிலையிலும் நான் என் குறிக்கோள்களை இழக்கவில்லை. இவையெல்லாம் அர்த்தமற்றவையாகத் தெரிந்தாலும், நான் இவற்றை இதுவரை என் உள்ளத்தில் சுமந்து வந்திருப்பது எனக்கே வியப்பாக இருக்கிறது. இவ்வுலகம் அவநம்பிக்கையில் மூழ்கினாலும், நான் என் குறிக்கோள்களை இழக்கப்போவதில்லை. ஒருநாள் வரும். அன்று என் குறிக்கோள்கள்களை வாழ்ந்து காட்டுவேன்."
கூட்டத்தோடு கலந்து மறைந்துவிடாமல், குறிக்கோள்களை இழக்காமல் வாழ்ந்த இறைவாக்கினர்களைப் போல், நம்மையும் இறைவன் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுவோம். உலகில் இன்றும் உண்மைகளை எடுத்துரைப்பதால் எதிர்ப்புக்களைச் சந்தித்துவரும் வீர உள்ளங்களை இறைவன் தொடர்ந்து காக்க வேண்டுமென்றும் உருக்கமாக வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.