2013-02-01 15:52:39

நேபாள மறைசாட்சிகள் பட்டியலில் முதல் அருள்பணியாளர்


பிப்.01,2013. நேபாளத்தில் 2008ம் ஆண்டில் இந்துத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திய அருள்பணியாளர் ஜான் பிரகாஷ் தேசிய மறைசாட்சியாளர் என்று அங்கீகரிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் திருமறைக்காகக் கொல்லப்பட்ட மறைசாட்சிகள் மற்றும் காணாமல்போனவர்கள் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் Gita Rasailee இவ்வாறு அறிவித்தார்.
நேபாளத்தின் சிறுபான்மை கத்தோலிக்கச் சமுதாயத்தில் முதன்முதலாகக் கொல்லப்பட்டவர் அருள்பணியாளர் ஜான் பிரகாஷ் என்றும், அந்நாட்டில் இந்நாள்வரை மறைசாட்சி என்ற சொல், உள்நாட்டுப் போரின்போது கொல்லப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் Gita Rasailee தெரிவித்தார்.
பெரும்பான்மையான இந்துக்களைக் கொண்டிருக்கும் நேபாளத்தில் சமய சகிப்பற்றதன்மைக்கு முதலில் பலியானவர் கத்தோலிக்க அருள்பணியாளர் ஜான் பிரகாஷ் என்றும் Gita Rasailee கூறினார்.
நேபாள மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் தங்கள் குழுக்களில் கொல்லப்பட்டவர்கள் மறைசாட்சியர் என அறிவிக்கப்பட வேண்டுமெனச் சொல்லி, பட்டியலைச் சேகரித்து வருவதையொட்டி எல்லா தரப்பினரும் தங்கள் தங்கள் மறைசாட்சியர் பட்டியலைத் தயாரித்து வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.