2013-02-01 15:40:50

திருத்தந்தை : பிறரன்புப் பணிகள் இல்லாத விசுவாசம் கனிகளற்ற மரத்திற்குச் சமம்


பிப்.01,2013. பிறரன்பின் மிகச் சிறந்த பணி நற்செய்தி அறிவிப்புப்பணி, ஏனெனில், ஒவ்வொன்றும் அன்பிலிருந்து தொடங்கி அன்பை நோக்கியே செல்கின்றது, கடவுளின் கைம்மாறு கருதாத அன்பு, நம் அனைவருக்கும் நற்செய்தி அறிவிப்பு வழியாக தெரிவிக்கப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
இம்மாதம் 13ம் தேதியன்று தொடங்கும் தவக்காலத்திற்கென இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, விசுவாசத்துக்கும் பிறரன்புக்கும் இடையே இருக்கும் பிரிக்க முடியாத நெருங்கிய உறவு குறித்து விளக்குகிறது.
விசுவாசம், ஒரு கொடையாகவும், கடவுளின் அன்புக்குப் பதில்சொல்வதாகவும் இருக்கின்றது, தந்தையின் விருப்பத்துக்கு முழுவதும் பணிந்து நடந்த மனுஉரு எடுத்த மற்றும் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைப் பற்றிய உண்மையை அறிந்துகொளளவும் விசுவாசம் உதவுகின்றது எனவும் திருத்தந்தையின் செய்தி கூறுகின்றது.
கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பில் நாம் நுழைவதற்கும், தமது விண்ணகத் தந்தைக்கும், தமது சகோதர சகோதரிகளுக்கும் வழங்கும் வரையற்ற, தன்னையே வழங்கும் இயேசுவில் இணைவதற்கும் பிறரன்பு உதவுகின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகின்றது.
“பிறரன்பில் நம்பிக்கை வைப்பது பிறரன்புக்கு நம்மை அழைக்கின்றது” என்ற தலைப்பில், விசுவாசம், கடவுளின் அன்புக்கான பதில், பிறரன்பு விசுவாசத்தில் வாழ்வு, பிறரன்புக்கும், விசுவாசத்துக்கும் இடையே இருக்கும் பிரிக்க முடியாத உறவு, பிறரன்பு, விசுவாசம் ஆகியவற்றுக்கான முன்னுரிமை ஆகிய நான்கு பகுதிகளில் திருத்தந்தையின் இச்செய்தி விவரிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.