2013-01-30 15:47:29

நம்பிக்கை இழந்து நாடு விட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு இன்று மக்கள் உட்படுத்தப்படுகின்றனர் - கர்தினால் Veglio


சன.30,2013. உலகமயமாக்கல் என்ற எதார்த்தத்தில் வளர்ந்துவரும் இவ்வுலகில், புலம்பெயர்தல் என்பது நாளுக்கு நாள் சவால்கள் நிறைந்த ஒரு போக்காக மாறிவருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரின் Sant'Egidio தலைமையகத்தில், ருமேனிய அரசின் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் இச்செவ்வாய் மாலை, புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணம் செய்வோர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
முன்னொரு காலத்தில், நம்பிக்கையை வளர்ப்பதற்கு நாடுவிட்டு நாடு செல்லும் திருப்பயணங்களை மக்கள் மேற்கொண்ட நிலை மாறி, நம்பிக்கை இழந்து நாடு விட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு இன்று மக்கள் உட்படுத்தப்படுகின்றனர் என்பதை கர்தினால் Veglio வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.
நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில் 'புலம்பெயர்தலும் நம்பிக்கையில் இணைதலும்' என்ற தலைப்பில் ருமேனிய அரசு நடத்தும் இக்கூட்டம் மகிழ்வைத் தருவதாகவும் கர்தினால் Veglio எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணம் செய்வோர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Veglio அவர்களுக்கு 'ருமேனியாவின் விண்மீன்' என்ற விருது வழங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.