2013-01-30 15:42:47

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


சன.30, 2013. திருத்தந்தையின் இவ்வாரப் புதன் மறைபோதகத்திற்குச் செவிமடுக்க ஆயிரக்கணக்கில் திருப்பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும் குழுமியிருக்க, நம் விசுவாச அறிக்கையில் காணப்படும் 'எல்லாம் வல்ல தந்தை அவரே' என்ற வாக்கியத்திற்கு விளக்கமளிப்பதாக, திருத்தந்தையின் இவ்வாரப் புதன் மறைபோதகம் இருந்தது. RealAudioMP3
நம்பிக்கை ஆண்டின் இந்த மறைக்கல்விப் போதகத்தின் தொடர்ச்சியாக, நாம் நம் விசுவாச அறிக்கையிடுதலில் காணப்படும் 'எல்லாம் வல்ல தந்தை அவரே' என்ற வாக்கியம் குறித்து இன்று காண்போம் என, தன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை. பல சமூகங்களில் 'தந்தை' என்பது குறித்து பல சிக்கல்கள் இருக்கின்றபோதிலும், இறைவனை, தந்தை என அழைப்பதன் அர்த்தம் குறித்து விவிலியம் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. கடவுள் எல்லையற்ற அளவில் தாராளகுணமுடையவர், விசுவாசமாக இருப்பவர் மற்றும் மன்னிப்பவர். அவர் இவ்வுலகை எவ்வளவு தூரம் அன்புகூர்ந்தார் என்றால், அவர் தன் ஒரே மகனையே நம் மீட்புக்காகக் கையளித்தார். கட்புலனாகாதக் கடவுளின் சாயலான இயேசு கிறிஸ்து, தன் குழந்தைகளை ஒருபோதும் கைவிடாத, மற்றும் சிலுவையையே ஏற்கும் அளவுக்கு அன்புடன் கூடிய அக்கறையுடைய கருணை நிறை தந்தையாக, கடவுளை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் நம்மைத் தன் தத்து புதல்வர் புதல்விகளாக மாற்றியுள்ளார் கடவுள். நம் தந்தையாம் இறைவன் எவ்வாறு எல்லாம் வல்லவராக உள்ளார் என்பதை சிலுவை நமக்கும் காட்டுகிறது. ஆற்றல் என்பது குறித்து மனிதன் கொண்டிருக்கும் கருத்துப்படிவங்களையெல்லாம் தாண்டிய ஒன்றாக உள்ளது அவரின் வரம்பற்ற பேராற்றல். பொறுமையுடைய அன்பை உள்ளடக்கிய அவரின் வலிமையானது, தீமையின் மீதான நன்மைத்தனம், மரணத்தின் மீதான வாழ்வு, பாவத்தளைகளின் மீதான விடுதலை ஆகியவைகளின் வெற்றியில் வெளிப்படுத்தப்படுகிறது. இயேசுவின் சிலுவை குறித்து தியானிக்கும் நாம், அவரின் மீட்பு வல்லமையிலும் இரக்கம் நிறை அன்பிலும் முழுநம்பிக்கைக் கொண்டவர்களாக அவரிடம் நம்மைக் கையளிக்கும் அருளுக்காக எல்லாம் வல்ல தந்தையாம் இறைவனை நோக்கி வேண்டுவோம். இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.