2013-01-29 15:35:11

இவ்வாண்டின் புனித வெள்ளி சிலுவைப்பாதைத் தியானங்களைத் தயாரிக்கிறார் கர்தினால் ராய்


சன.29,2013. வருகிற மார்ச் 29ம் தேதி புனித வெள்ளியன்று உரோம் கொலோசேயத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முன்னிலையில் இடம்பெறும் சிலுவைப்பாதைப் பக்தி முயற்சிக்குரிய தியானங்களைத் தயாரிக்கவுள்ளார், அந்தியோக்கியாவின் மாரனைட்ரீதி முதுபெரும் தலைவர் கர்தினால் பெக்காரா ராய்.
திருத்தந்தை கடந்த ஆண்டில் லெபனனுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின்போது, நிலையற்றதன்மையை தொடர்ந்து எதிர்கொண்டுவரும் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்பட அழைப்பு விடுத்து, அப்பகுதியின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்காகவும் செபித்ததற்கு நன்றிகூறும்விதமாக, இவ்வாண்டு புனித வெள்ளி சிலுவைப்பாதைத் தியானச் சிந்தனைகளைத் தயாரிக்கிறார், கர்தினால் பெக்காரா ராய்.
இத்தயாரிப்புக்களில் இரு லெபனன் இளையோர் பங்கு கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இயேசு பிறந்த மத்திய கிழக்குப் பகுதியில் வருங்காலக் கிறிஸ்தவத்தின் அடையாளமாக இருக்கின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
உரோமையப் பேரரசில் கி.பி.80ல் கட்டி முடிக்கப்பட்ட மிகப்பெரிய கேளிக்கை அரங்கான கொலோசேயத்தில், ஆதிக்கிறிஸ்தவர்கள் பெருமெண்ணிக்கையில் மிருகங்களுக்கு இரையாகப் போடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.