2013-01-28 15:54:58

வாரம் ஓர் அலசல் – ஓர் உயிரைக் காப்பாற்றுபவர் அகில உலகையே காப்பாற்றுகிறார்


சன.28,2013. RealAudioMP3 "ஓர் உயிரைக் காப்பாற்றுபவர், அகில உலகையே காப்பாற்றுகிறார்"(Mishnah, Sanhedrin 4:5). மிஷ்னா என்ற யூதச் சட்ட நூலின் விளக்கத்தில் சொல்லப்பட்டுள்ள கூற்று இது. தங்களின் உயிரைப் பணயம் வைத்து, ஓர் உயிரை அல்லது பல உயிர்களைக் காப்பாற்றிய தியாகிகள் இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் கவுரவிக்கப்பட்டனர். சென்னையில் சிறப்பிக்கப்பட்ட இந்தியக் குடியரசு தினவிழாவில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், 2012ம் ஆண்டில் வீரதீரச் செயல்கள் புரிந்த 11 பேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், சான்றிதழும் வழங்கியுள்ளார். இந்தப் 11 பேரில் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ஜவசர். இவர் கடந்த ஆண்டு மே முதல் தேதியன்று கைலாசநாதர் கோவில் தேர்த்திருவிழாவின்போது தேர் நிலை குலைந்து உயிரிழந்த 5 பேரில் ஒருவர். இவர் தேர் கவிழும்போது கூச்சலிட்டு அனைவரையும் ஒதுங்கச் செய்ததுடன் 2 பேரை வெளியே தள்ளிக் காப்பாற்றியபோது உயிர் இழந்தார். ஜவசர் சார்பில் அவரது மனைவி இந்த விருதைப் பெற்றார். இப்படி இந்த 11 பேரும் அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட்டுள்ளனர்.
அதேபோல், இந்தியக் குடியரசு தினவிழாவன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், 2013ம் ஆண்டுக்கான தேசிய வீர விருதை பல மாநிலங்களைச் சார்ந்த 22 சிறார்க்கு வழங்கியுள்ளார். இவர்களில் 4 பேர் சிறுமியர். 18 பேர் சிறுவர்கள். ஆண்டுதோறும், குடியரசு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வீரச்செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறாருக்குத் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த சுகந்தனும் ஒருவர். மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் சுகந்தன், கடந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, கங்கையம்மன்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழம் கொண்ட ஆற்றில் 16 வயதான எஸ்.கிருத்திகா என்ற சிறுமி மூழ்கினார். இதைப் பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது சுகந்தன் மட்டும் துணிச்சலுடன் ஆற்றில் குதித்து அச்சிறுமியைக் காப்பாற்றியிருக்கிறார். அதேபோல், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயதான Koroungamba Kuman, தனது தங்கையை, பற்றிஎரிந்து கொண்டிருந்த தீயிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். சிறுவர் காப்பகத்தில் முறையின்றி அடைக்கப்பட்டிருந்த சிறார்களை மீட்டுள்ளார் தில்லியைச் சேர்ந்த 17 வயது ரேனு. இப்படி 22 சிறாரும் ஒவ்வொரு விதத்தில் வீரதீரச் செயல்களைச் செய்துள்ளனர்.
இதேபோல் இஸ்ரேல் அரசு இஞ்ஞாயிறன்று பல தியாகிகளை நன்றியோடு நினைவுகூர்ந்து அவர்களிடமிருந்து சமுதாயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளது. இஞ்ஞாயிறு அனைத்துலக யூத இனஅழிப்பு நினைவு தினம். இரண்டாம் உலகப் போரின்போது 1945ம் ஆண்டு சனவரி 27ம் தேதி சோவியத் படைகள், ஜெர்மனியின் நாத்சி அவுஷ்விஷ் வதை முகாம்களை விடுதலை செய்தன. ஐரோப்பாவில் யூதர்களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் ஹிட்லரின் நாத்சிக் கொள்கையில் உருவான இந்த வதை முகாம்களில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினோர் யூதர்கள். ஆயினும், இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாடு, உலக வரைபடத்தில் கோலோச்சுவதற்கு, இந்த வதை முகாம்களிலிருந்து உயிர் தப்பிய யூதர்களும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இவர்கள் தப்பினார்கள் என்று சொல்வதைவிட, யூதரல்லாத பல நாட்டவரால் தப்பிக்க வைக்கப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தங்களது வாழ்வைப் பெரிதாக நினைக்காமல், அன்று பலர், பல யூதர்களைக் காப்பாற்றினார்கள். இப்படி யூதர்களைக் காப்பாற்றியவர்களை “நாடுகள் மத்தியில் நல்ல மனிதர்கள்” என்று பெயரிட்டு அவர்களுக்கென எருசலேமில் Yad Vashem என்ற நினைவு மண்டபத்தையும் 1963ம் ஆண்டில் அமைத்தது இஸ்ரேல் அரசு. அல்பேனியா, ஆஸ்ட்ரியா, பெலாருஸ், பெல்ஜியம், பிரேசில், பல்கேரியா, ஜெர்மனி, இத்தாலி என ஏறக்குறைய 47 நாடுகளின் 24,356 நல்ல மனிதர்கள், பல யூதர்களை இன அழிப்பிலிருந்து காப்பாற்றினார்கள் என்று இந்நினைவு மண்டபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர்ப் பட்டியல் இன்னும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
68 ஆண்டுகளுக்கு முன்னர், யூதர்கள் படுகொலை செய்யப்படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்றிய வீரமனிதர்கள் எதிர்நோக்கிய துன்பங்களை இஸ்ரேல் இன்றும் மறக்கவில்லை. அவர்கள் எதிர்நோக்கிய துன்பங்கள் நாட்டுக்கு நாடு வித்தியாசமாக இருந்தன. Primo Levi என்ற யூதர், தன்னைக் காப்பாற்றிய Lorenzo Perrone என்பவர் குறித்து இவ்வாறு நினைவுகூருகிறார்...
“நான் இன்று உயிரோடு இருப்பதற்கு உண்மையிலேயே Lorenzoவுக்குத்தான் நன்றி சொல்வேன். நமது உலகையும் தாண்டி மற்றோர் உலகம் இருக்கின்றது. அங்கு ஏதோ ஒன்று, யாரோ ஒருவர் தூய்மையாகவும் முழுமையாகவும் இருக்கின்றார். எனவே நாம் வாழ்வது தகுதியானதாகும். இவ்வாறு Lorenzo தனது பிரசன்னத்தால் தொடர்ந்து எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்குச் செய்த பொருள் உதவியைவிட இந்த உதவி உயர்ந்தது….”
Primo Levi போன்று, இன்று பல யூதர்கள் தங்களுக்குத் தஞ்சம் கொடுத்தவர்களை நன்றியோடு நினைக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின்போது கிழக்கு ஐரோப்பாவில் யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மனிதர்கள் மட்டுமன்றி, அவர்களது குடும்பங்களும் ஹிட்லரின் ஆள்களால் கொலை செய்யப்பட்டன. சிலர் வதை முகாம்களில் சிறையில் வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமைகளைப் பார்த்தபோது யூதர்களைக் காப்பாற்றியவர்களும், காப்பாற்றப்பட்ட யூதர்களும் எப்போதும் பயந்து கொண்டே வாழ்ந்துள்ளனர். அண்டைவீட்டாரும், நண்பர்களும் எப்போது தங்களைக் காட்டிக்கொடுப்பார்களோ என்ற அச்சமும் அவர்களிடம் இருந்தது. அதோடு, தங்களது அன்றாட வாழ்வு நடவடிக்கைகளைத் தியாகம் செய்து பதுங்கிடங்களில் மறைந்தும் வாழ்ந்தனர். தங்கள் வீடுகளில் குழிகள் தோண்டி அதில் யூதர்களைத் தங்க வைத்திருந்தனர். மாட்டுத் தொழுவங்களிலும், களஞ்சியங்களிலும் பதுக்கி வைத்திருந்தனர். தூதரக அதிகாரிகள் போலி ஆவணங்கள் கொடுத்து யூதர்களைத் தப்ப வைத்திருக்கின்றனர். 1944ம் ஆண்டின் இறுதியில் புடாபெஸ்டிலிருந்த தூதரக அதிகாரிகள், தாங்கள் பாதுகாப்பு அளித்த யூதர்கள் தங்கியிருந்த வீடுகளின்மேல் தங்களது நாடுகளின் கொடிகளையும் கட்டி வைத்திருந்தனர். இரண்டாம் உலகப்போரின்போது துருக்கியில் திருப்பீடத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றிய பேராயர் ஜான் ரொன்காலி ஆயிரக்கணக்கான யூதர்களைக் காப்பாற்றியிருக்கிறார். இவர்தான் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர்.
இந்த மாதிரி பல ஆபத்துக்கள் மத்தியில் யூதர்களைக் காப்பாற்றிய பல நாடுகளின் நல்ல மனிதர்களை, இஞ்ஞாயிறன்று Yad Vashem நினைவு மண்டபத்தில் நினைவுகூர்ந்தது இஸ்ரேல் அரசு. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இந்த 68வது அனைத்துலக யூத இனஅழிப்பு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது உரையாற்றிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், “நாத்சிகளின் கொலைவெறியிலிருந்து யூதர்களைக் காப்பாற்றுவதற்குத் தங்கள் உயிரைத் துச்சமென எண்ணியவர்கள் மற்றும் அந்தக் கொலைவெறிக்குப் பலியானவர்களை நினைவுகூர்வோம்” என்று கூறினார். “யூதர்கள், Roma, Sinti இனத்தவர், சோவியத் போர்க் கைதிகள், ஹிட்லரின் கொள்கைக்கு ஒத்துவராதவர்கள் என இலட்சக்கணக்கானோர் இரண்டாம் உலகப்போர் முழுவதும் Auschwitz Birkenau போன்ற மரண முகாம்களில் கொல்லப்பட்டனர், சிலர் இதிலிருந்து தப்பித்தனர். தங்களது வாழ்வைத் தியாகம் செய்யத் தயாராக இருந்த சில வீர உள்ளங்களே, சில யூதர்கள் இந்தக் கொடுமையிலிருந்து தப்பிப்பதற்குக் காரணம். இன்று நல்லதோர் பாதுகாப்பான உலகை அமைப்பதற்கு, பிறர்மீது அக்கறை காட்டும் துணிச்சல் அனைவருக்கும் தேவை” என்று கூறினார். RealAudioMP3 இந்த அனைத்துலக நாள் குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், “இந்த கடந்தகாலக் கொடுமைகள் ஒருபோதும் மீண்டும் இடம்பெறாமல் இருக்கவும், அனைத்து விதமான வெறுப்புணர்வும் இனப்பாகுபாடும் களையப்படவும், மனித மாண்பு ஊக்குவிக்கப்படவும், இந்நாள் உலகினர் அனைவருக்கும் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறினார RealAudioMP3 ். இந்த Auschwitz, Buna, Buchenwald போன்ற மரண முகாம்களில் கைதியாக இருந்த பின்னர் அவற்றிலிருந்து தப்பிய, நொபெல் அமைதி விருது (1986) பெற்றுள்ள யூதரான Elie Wiesel சொன்னார்....
“நாத்சியின் கொடூரமான சர்வாதிகார ஆட்சியையும் உடைத்தெறிய முடிந்தது. இதற்குத் தேவையானது அதை முறியடிக்க வேண்டுமென்ற நல்ல மனது, ஆர்வம், மனித சமுதாயத்தின் மீதான பரிவிரக்கம். எனவே யூதஇன அழிவிலிருந்து யூதர்களைக் காப்பாற்றிய அந்த நல்ல மனிதர்களை நாம் அறிந்திருக்க வேண்டும். அவர்களிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்”.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலி, சிரியா என நாடுகளில் சண்டைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குண்டுவீச்சுக்கள், வன்முறைகள், பசி மற்றும் நோயினால் தினமும் பலர் இறந்து கொண்டிருக்க, உலகில் ஒவ்வோர் ஆண்டும் 130 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன. தென் பிரேசிலில் Santa Maria நகர இரவு விடுதி ஒன்றில் இஞ்ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 245 பேர் இறந்துள்ளனர். எகிப்தில் கலவரம், 26 பேர் பலி. வெனெசுவேலா நாட்டுச் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 58 பேர் பலி. அன்பர்களே, இப்படி அன்றாடச் செய்திகளை வாசிக்கும்போது, மனிதர்களில் பலர் கடந்தகாலக் கொடூரங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. நீரிலும் நெருப்பிலும் துணிச்சலுடன் புகுந்து மனித உயிர்களைக் காப்பாற்றி இந்தியக் குடியரசு தினவிழாவன்று விருதுகள் பெற்றுள்ள சுகுந்தன், ரேணு, தராங், போன்ற 22 சிறார், தமிழகத்தில் விருதுபெற்ற அந்த 11 பேர், இரண்டாம் உலகப் போரின் கொலைவெறிக்கு மத்தியில் யூதர்களைக் காப்பாற்றிய 24 ஆயிரத்துக்கு அதிகமான நல்ல மனிதர்கள் போன்றோர் நமக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆம். யூதர்களின் மிஷ்னா சொல்கிறது : “ஓர் உயிரைக் காப்பாற்றுபவர் அகில உலகையே காப்பாற்றுகிறார்” என்று. பிறரிடம் அன்பு வைத்திருப்பவரால் மட்டுமே இவ்வாறு வாழ இயலும். இரவீந்திரநாத் தாகூர் சொன்னார் : “பிறரைப் பற்றிய அன்பு இல்லாமல் சுயநலமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்களைத் தாங்களேச் சாப்பிடும் விலங்குகள் மாதிரி” என்று.








All the contents on this site are copyrighted ©.