2013-01-28 16:04:19

யூத இனஅழிப்பு நினைவு நாள் - மனித மாண்பு மதிக்கப்பட திருத்தந்தை வேண்டுகோள்


சன.28,2013. கடந்தகாலக் கொடுமைகள் ஒருபோதும் மீண்டும் இடம்பெறாமல் இருக்கவும், அனைத்து விதமான வெறுப்புணர்வும் இனப்பாகுபாடும் களையப்படவும், மனித மாண்பு ஊக்குவிக்கப்படவும் அனைத்துலக யூத இனஅழிப்பு நினைவு நாள், உலகினர் அனைவருக்கும் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறன்று அனைத்துலக யூத இனஅழிப்பு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, யூதமக்களை மிகக் கொடூரமாய்ப் பாதித்த நாசிசத்துக்குப் பலியானவர்கள் மற்றும் அதன் கொடூர விளைவுகள் குறித்தும் நினைவு கூர்ந்தார்.
அதோடு, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட 60வது அனைத்துலக தொழுநோயாளர் தினம், புனித பூமியில் அமைதிக்கான செப நாள் ஆகியவற்றையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று 60வது அனைத்துலக தொழுநோயாளர் தினம் கடைப்பிடிக்கப்படும்வேளை, இந்நோயால் துன்புறுவோருடன் தான் மிகுந்த நெருக்கமாக இருப்பதாகவும், இந்நோய்க் குறித்து ஆய்வு செய்வோர், நலவாழ்வு மற்றும் தன்னார்வப் பணியாளர்கள், சிறப்பாக, கத்தோலிக்க நிறுவனங்கள், Raoul Follereau நண்பர்கள் அமைப்பினர் என தொழுநோயாளர் மத்தியில் பணி செய்யும் அனைவரையும் தான் ஊக்குவிப்பதாகவும் கூறினார். தொழுநோயாளர்களுக்கெனத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த புனிதர்கள் Damien de Veuster, Marianna Cope ஆகியோரின் பரிந்துரைகளையும் இறைஞ்சினார் திருத்தந்தை.
புனித பூமியில் அமைதி இடம்பெற சிறப்பாகச் செபிப்பதற்கு இஞ்ஞாயிறு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இங்கு அமைதி இடம்பெற உழைக்கும் அனைவரையும் தான் உற்சாகப்படுத்துவதாகத் தெரிவித்தார் அவர்.
உரோம் கத்தோலிக்க கழகத்தைச் சேர்ந்த இரண்டு சிறார் திருத்தந்தையின் இரு பக்கங்களிலும் நின்று அமைதிக்கான செய்தியை வாசித்தனர். பின்னர் திருத்தந்தை இரண்டு வெண்புறாக்களைப் பறக்கவிட்டார்.







All the contents on this site are copyrighted ©.