2013-01-26 16:19:42

மாலி நாட்டின் நிலைமை மிக மோசமாக உள்ளது, ஆயர்கள் கவலை


சன.26,2013. மாலி நாட்டின் இடைக்கால அரசுத்தலைவர் Dioncounda Traore அந்நாட்டை ஒன்றிணைத்து வைப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ள அதேவேளை, இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான அரசின் முயற்சிகளுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.
மாலியின் இன்றைய கடுமையான நிலைமை குறித்து அரசுத்தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ள ஆயர்கள், அந்நாட்டின் வருங்காலப் பாதுகாப்புக்கு உதவும் நோக்கத்தில், தவக்காலம் தொடங்கும் வருகின்ற பிப்ரவரி 13ம் தேதியன்று கிறிஸ்தவ சமூகத்தின் உதவியையும் கேட்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
மாலியில் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரித்தாஸ் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் பிறரன்பு நிறுவனமும் உதவி செய்து வருகின்றன.
மாலியின் வடக்குப் பகுதி நகரங்களிலும் கிராமங்களிலும் கடுமையான இசுலாமிய ஷாரியா சட்டத்தைப் புகுத்தி அந்நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றுவதற்கு முயற்சித்துவரும் இசுலாமியத் தீவிரவாதிகளை அடக்குவதற்கு இம்மாதம் 11ம் தேதி பிரான்ஸ் நாடு தலையிட்டு மாலியின் இராணுவத்துக்கு உதவி செய்து வருகிறது.
மாலியின் ஒரு கோடியே 55 இலட்சம் மக்களில் 1.3 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். மற்றும் 90 விழுக்காட்டினர் முஸ்லீம்கள்.
இதற்கிடையே, மாலியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நெருக்கடி நிலைகள், மேற்கு ஆப்ரிக்கா மற்றும் சாஹெல் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா.அதிகாரிகள் கூறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.