2013-01-26 16:23:15

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த இந்தியாவின் செயலுக்கு ஐ.நா.பாராட்டு


சன.26,2013. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றுவதற்கென ஒரு புதிய அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகள், செயல்திட்டத்துக்கான அடித்தளமாக இருக்கின்றன எனப் பாராட்டியுள்ளார் ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் நவிபிள்ளை.
முன்னாள் தலைமை நீதிபதி ஜெகதீஷ் ஷரண் வர்மா பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள வர்மா அறிக்கையும், அதன் பரிந்துரைகளும் ஐந்து வாரங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 23 வயது இளைஞிக்கு மட்டும் இல்லாமல், இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்குப் பலியாகும் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக இருக்கின்றது என்று நவிபிள்ளை கூறியுள்ளார்.
‘Enough is Enough’ என்று சொன்ன இந்தியாவின் இளைஞர் மற்றும் இளைஞிகளின் சக்திக்கும், பரந்துபட்ட சமூகத்தின் வல்லமைக்கும் இவ்வறிக்கை சாட்சியாக இருக்கின்றது என்றும் நவிபிள்ளை பாராட்டியுள்ளார்.
மேலும், கல்வி, நலவாழ்வு உட்பட தங்களது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஏறக்குறைய பத்தாயிரம் சிறார் வருகிற பிப்ரவரி 2ம் தேதி புதுடெல்லியில் மாபெரும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.