2013-01-26 16:15:08

பாஸ்டன் கர்தினால் : வாழ்வுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் விசுவாசத்தில் வளர வேண்டும்


சன.26,2013. வாழ்வுக் கலாச்சாரம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மாற்றத்தின்மீது அமைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று சொல்லி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்வுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் தங்களது விசுவாசத்தை ஆழப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார் பாஸ்டன் கர்தினால் Seán P. O'Malley.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்ற வாழ்வுக்கு ஆதரவான மாபெரும் பேரணியில் பங்கு கொண்ட திருப்பயணிகளிடம் இவ்வாறு உரைத்த கர்தினால் O'Malley, நமது விசுவாசத்தை உறுதியுடன் வாழும்போது அது வாழ்வுக் கலாச்சாரத்தை உண்டுபண்ணும் என்றும், நமது விசுவாசத்தை ஆழப்படுத்த வேண்டியது நமது கடமை என்றும் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்வுக்கு ஆதரவாகத் தொடங்கிய தேசிய செப வழிபாட்டின் முதல் கட்டமாக இடம்பெற்ற திருப்பலியை வாஷிங்டன் தேசிய அமலமரி பசிலிக்காவில் இவ்வியாழன் மாலை நிகழ்த்தி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் கர்தினால் O'Malley.
6 கர்தினால்கள், 41 ஆயர்கள் மற்றும் 324 அருள்பணியாளர்கள் சேர்ந்து நிகழ்த்திய இத்திருப்பலியில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டினரின் வாழ்வுக்கு ஆதரவான இந்நடவடிக்கைக்குத் திருத்தந்தையும் டிவிட்டர் மூலம் தனது ஆதரவுச் செய்தியை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.