2013-01-26 15:02:06

கற்றனைத் தூறும்... மாரத்தான் ஓட்டம்


கி.மு. 490ம் ஆண்டு ‘மாரத்தான்’ எனுமிடத்தில் நடந்த போரில் பாரசீகப் படையை கிரேக்கப் படை வென்றது. Pheidippides என்ற வீரன் இந்த வெற்றிச் செய்தியை ஏதென்ஸ் நகருக்குச் சொல்ல ஓடினார். மாரத்தானிலிருந்து ஏதென்ஸ் நகருக்கு இடையே உள்ள ஏறத்தாழ 40 கி.மீ. தூரத்தை இவ்வீரர் நில்லாமல் ஓடி, ஏதென்ஸ் பாராளுமன்றத்தில் நுழைந்தார். அங்கு, "நாம் வென்றுவிட்டோம்" என்ற செய்தியைச் சொல்லிவிட்டு, அங்கேயே கீழே விழுந்து இறந்தார் என்று சொல்லப்படுகிறது. Pheidippides என்ற இந்த வீரரின் நினைவாக மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இடம்பெற்றது.
மாரத்தான் பந்தயத்தின் தூரம் சரியாக 42.195கி.மீ. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1908ம் ஆண்டு இலண்டனில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்றபோது, மாரத்தான் பந்தயம் Windsor கோட்டையில் ஆரம்பித்து, இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுத்திடலில் அரசக் குடும்பம் அமர்ந்திருந்த பந்தலுக்கு முன் முடிவடைந்தது. இந்த தூரம் சரியாக 42.195கி.மீ. இதுவே, மாரத்தான் ஓட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட நீளமானது.
ஒவ்வோர் ஆண்டும் உலகின் பல நாடுகளில் 500க்கும் அதிகமான இடங்களில் மாரத்தான் பந்தயங்கள் நடைபெறுகின்றன. 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் மாரத்தான் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் என்ற இரு பிரிவிலும் வென்றவர்கள் ஆப்ரிக்காவின் கென்யா நாட்டு வீரர்கள். கடந்த பத்தாண்டுகளில் ஆப்ரிக்காவின் கென்யா மற்றும எத்தியோப்பிய வீரர்கள் மாரத்தான் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.