2013-01-25 16:03:25

பேராயர் சிமோஸ்கி : தொழுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அதற்குச் சிகிச்சை அளிப்பதற்கும் இன்னும் போதுமான வசதிகள் இல்லை


சன.25,2013. தொழுநோயாளர்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த புனித தமியான், முத்திப்பேறு பெற்ற அன்னைதெரேசா மற்றும் பல புனிதர்கள், தன்னார்வப் பணியாளர்கள் ஆகியோரைப் பின்பற்றி, அந்நோயாளிகளுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு கேட்டுக் கொண்டார் பேராயர் Zygmunt Zimowski.
இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் 60வது அனைத்துலக தொழுநோயாளர் தினத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட நலவாழ்வுப் பணியாளர்களுக்கான அவையின் தலைவர் பேராயர் Zimowski, உலகில் தொன்மைகாலந்தொட்டே மனிதரைத் தாக்கி வருவதாக நம்பப்படும் தொழுநோய் குணப்படுத்தப்படவில்லையென்றால் இறப்பை வருவிக்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், அந்நோயாளிகள், சமூகத்தால் ஓரங்கட்டப்படுதலையும் வறுமையையும் எதிர்கொள்கின்றனர் என்றுரைக்கும் பேராயரின் செய்தி, இவர்கள் பரிவன்புடன் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
2011ம் ஆண்டில் இரண்டு இலட்சம் பேர் தொழுநோயால் தாக்கப்பட்டிருந்தனர் என்றும், இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்பட்டிருந்தவர்கள், நோய் முற்றிய நிலையிலே கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும் உலக நலவாழ்வு நிறுவனம்(WHO) வெளியிட்ட புள்ளிவிபரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் Zimowski.
இந்தியா, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகள், தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் தொழுநோய்ப் பாதிப்பு அதிகம் உள்ளது என உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.