2013-01-25 15:54:48

குருத்துவக் கல்லூரிகள், மறைக்கல்வி குறித்த திருத்தந்தையின் அப்போஸ்தலிக்கக் கடிதங்கள்


சன.25,2013. குருத்துவக் கல்லூரிகளை வழிநடத்தும் பொறுப்பை திருப்பீடக் குருக்கள் பேராயத்திடமும், மறைக்கல்வி குறித்த மறைப்பணியை மேற்பார்வையிடும் பொறுப்பை, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையிடமும் ஒப்படைக்கும் இரண்டு அப்போஸ்தலிக்கக் கடிதங்களை இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
“Motu Proprio” அதாவது “திருத்தந்தையின் சொந்த எண்ணத்தின்படி” என்ற இரண்டு தனித்தனியான அப்போஸ்தலிக்கக் கடிதங்களில் இந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திருத்தந்தையின் “Fides per doctrinam” என்ற அப்போஸ்தலிக்கக் கடிதத்தின்படி, குருக்கள் பேராயத்திடம் இருந்த மறைக்கல்வி குறித்த மறைப்பணியை மேற்பார்வையிடும் பொறுப்பு, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
திருத்தந்தையின் “Ministrorum institutio” என்ற அப்போஸ்தலிக்கக் கடிதத்தின்படி, குருத்துவக் கல்லூரிகளை வழிநடத்தும் பொறுப்பு, கத்தோலிக்கக் கல்விப் பேராயத்திடமிருந்து குருக்கள் பேராயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் மூலம், அகில உலகத் திருஅவை மற்றும் தலத்திருஅவைகளின் நன்மைக்கும், பணிக்குமெனத் திருத்தந்தைக்கு உதவும் திருப்பீடத் தலைமையகத்திலுள்ள துறைகளின் பணிகளில் மாற்றங்கள் இடம்பெறும்.
இந்த மாற்றங்கள் இடம்பெறும் என, ஏற்கனவே கடந்த அக்டோபர் 27ம் தேதி உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுற்றபோது திருத்தந்தை தெரிவித்திருந்தார்.







All the contents on this site are copyrighted ©.