2013-01-24 15:47:26

விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை திருஅவை என்றும் நியாயப்படுத்தியது இல்லை - அருள்தந்தை Federico Lombardi


சன.24,2013. மிருகங்களுக்கு இழைக்கப்படும் வரம்பு மீறிய கொடுமைகளை, கத்தோலிக்கத் திருஅவை எதிர்த்து வருகிறது என்று வத்திக்கான் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
யானை தந்தத்தால் ஆன திரு உருவங்கள் கத்தோலிக்க ஆலயங்களில் வழிபாட்டில் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி National Geographic பத்திரிகையில் சனவரி 17ம் தேதி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. Oliver Payne என்பவர் எழுதிய இக்கட்டுரையை அடுத்து, வத்திக்கானுக்கு பல மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த மின்னஞ்சல்களுக்கும், Oliver Payne எழுதிய கட்டுரைக்கும் பதில் தரும் வகையில் அருள்தந்தை Lombardi, தன் எண்ணங்களைத் தொகுத்து, National Geographic இதழுக்கு ஒரு கடிதமாக வழங்கியுள்ளார்.
விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை திருஅவை என்றும் நியாயப்படுத்தியது இல்லை என்பதை இக்கடிதத்தில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
யானையின் தந்தத்தால் ஆன பொருள்கள் விலையேறப் பெற்றவை என்ற எண்ணம் பரவலாக இருந்த பழங்காலத்தில், திரு உருவங்கள் தந்தத்தால் செய்யப்பட்டன என்பதை மறுக்கமுடியாது என்று கூறும் அருள்தந்தை Lombardi, திருஅவை இந்தப் பழக்கத்தை உற்சாகப்படுத்தியது என்று சொல்வது தவறான எண்ணம் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் பல நாடுகளில் தந்த வேட்டையில் யானைகள் கொல்லப்படுவதற்கு, திருஅவை வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது என்பதையும் தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் அருள்தந்தை Lombardi.








All the contents on this site are copyrighted ©.