2013-01-24 15:43:58

திருத்தந்தையின் உலகத் தொடர்பு நாள் செய்தி டிஜிட்டல் புரட்சிகளைப் பற்றிய ஒரு நடுநிலையான கருத்தை வெளியிட்டுள்ளது - பேராயர் Claudio Maria Celli


சன.24,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கியுள்ள உலகத் தொடர்பு நாள் செய்தி, நமது டிஜிட்டல் தொடர்புப் புரட்சிகளைப் பற்றிய ஒரு நடுநிலையான கருத்தை வெளியிட்டுள்ளது என்று வத்திக்கன் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2013ம் ஆண்டுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள 47வது உலகத் தொடர்பு நாள் செய்தியை, சனவரி 24, இவ்வியாழனன்று காலை செய்தியாளர்களிடம் வெளியிட்டு, உரையாற்றிய சமூகத் தொடர்புகள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli இவ்வாறு கூறினார்.
கணணிவழித் தொடர்புகளைப் பற்றிய கவலை பலரையும் பாதித்துள்ள வேளையில், திருத்தந்தை விடுத்துள்ள இந்தச் செய்தி, இன்றையத் தொடர்புகளை நேர்மறையாக, அதே நேரம், ஆழமாக அலசியுள்ளது என்று பேராயர் Celli சுட்டிக்காட்டினார்.
ஆதாரமற்ற பல செய்திகளைப் பகிர்ந்து வரும் சமுதாய வலைத்தளங்களில் தெளிவான சிந்தனைகளுடன், தகுந்த ஆதாரங்களுடன் செய்திகளைப் பகிர்வதும் அவசியம் என்பதை திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது என்றும் பேராயர் Celli எடுத்துரைத்தார்.
சமூகத் தொடர்புகள் திருப்பீட அவையின் செயலர் பேரருள்தந்தை Paul Tighe, செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது, தொடர்பு சாதனங்கள் இறைவனின் ஒரு கொடை எனவும், இக்கொடைகளை நாம் பயன்படுத்தும் முறைகளிலேயே சமுதாய மாற்றங்களைக் கொணர முடியும் எனவும் திருத்தந்தை தன் செய்திகளில் கூறி வருகிறார் எனச் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.