2013-01-24 15:52:46

செவ்வாய்க் கோளத்தில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான வலுவான அறிகுறிகள்


சன.24,2013. செவ்வாய்க் கோளத்தில் நிலப்பரப்புக்கு கீழே கிடைக்கப்பெறுகின்ற தாதுப்பொருட்கள், அக்கோளத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருக்கும் ஆதாரங்களில் வலுவானதென்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
செவ்வாய்க் கோளத்தின் வரலாற்றில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.
இலண்டனின் Natural History அருங்காட்சியகம் மற்றும் Aberdeen பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Nasa மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Esa (European Space Agency) ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் Nature Geoscience என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
கோளங்களை விண்கற்கள் மோதும்போது, நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன. செவ்வாய்க் கோளத்தில் அவ்வாறு விண்கல் மோதியதால் ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் தாதுப்பொருட்களை ஆராயும்போது, அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கோளத்தில் நிலத்தடியில் நுண்ணியிர்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்படுமானால், பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் அது உதவியாக இருக்கும் என்று ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான முனைவர் Joseph Michalski கூறினார்.








All the contents on this site are copyrighted ©.