2013-01-23 15:35:47

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசிய மக்களுக்கு உதவுமாறு திருத்தந்தை வேண்டுகோள்


சன.23,2012. இந்தோனேசியாவில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தனது செபத்தையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தலைநகர் ஜகார்த்தாவில், பெரும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம், பொருள்சேதம் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்திருப்பது குறித்த செய்திகளை மிகுந்த கவலையோடு கேட்டுவருவதாக, இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கூறிய திருத்தந்தை, பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களில் யாரும் கைவிடப்படாதவாறு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு கேட்டுக்கொண்டார். அம்மக்களுக்காகச் செபிக்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
கடைசியாக வந்த செய்திகளின்படி, ஜகார்த்தாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தால் 26 பேர் இறந்துள்ளனர் மற்றும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. இறந்துள்ளவர்களில் பலர் நீரில் மூழ்கி அல்லது மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர்.
ஜகார்த்தாவில் சில இடங்களில் இரண்டு மீட்டர் அளவுக்கு வெள்ளம் ஏற்ப்ட்டுள்ளநிலையில், ஏறக்குறைய 1,03,000 மக்கள் தற்போது தற்காலிகக் குடிசைகளில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாழும் இந்நகரின் 30 விழுக்காட்டுப் பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன எனச் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.