2013-01-23 15:36:37

துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் களைவதற்கு திருஅவை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் - அமெரிக்க ஆயர்கள்


சன.23,2013. துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் வன்முறைக் கலாச்சாரத்திற்குப் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நமது செபங்களை எழுப்பும் அதே வேளையில், இவ்வன்முறையைக் களைவதற்கு தகுந்த நடவடிக்கைகளையும் திருஅவை மேற்கொள்வது அவசியம் என்று அமெரிக்க ஆயர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தின் நியூடவுன் நகரில் குழந்தைகள் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, துப்பாக்கி பயன்பாடு குறித்து அமெரிக்க ஆயர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்க ஆயர் பேரவையின் மனித முன்னேற்றம், உள்நாட்டு நீதி பணிக்குழுவின் தலைவரான ஆயர Stephen Blaire, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், மீண்டும் ஒருமுறை தங்கள் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
Newtown, Aurora, Tucson, Fort Hood, Virginia Tech, Columbine, Oak Creek, ஆகிய பல நகரங்களில் நடைபெற்றுள்ள வன்முறைகள் இனியும் தொடராமல் இருக்க, நாம் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று ஆயரின் கடிதம் வலியுறுத்தியுள்ளது.
2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு முழுமையடையாத அறிக்கையின்படி, அமெரிக்காவில் அவ்வாண்டு 12,664 கொலைகள் நிகழ்ந்தன என்றும், இவற்றில் 68 விழுக்காடு அதாவது, 8,583 கொலைகள் துப்பாக்கிச் சூட்டினால் நடைபெற்றுள்ளன என்றும் தெரிகிறது.








All the contents on this site are copyrighted ©.