2013-01-23 15:29:25

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


சன.23, 2013. நம்பிக்கை ஆண்டிற்கான பொதுமறைப்போதகத் தொடரில் இன்று, கிறிஸ்தவர்களாக நம் விசுவாசத்தை வெளியிடும் விசுவாச அறிக்கை குறித்து நோக்குவோம் என, தன் இவ்வார புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
விசுவாச அறிக்கையின் துவக்கத்தில் நாம் 'ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன்' எனக் கூறுகின்றோம். நம்முடன் முதலில் பேசி, தன்னை நமக்கு வெளிப்படுத்தி, அவருடனான ஒன்றிப்பில் நுழைய நமக்கு அழைப்புவிடுக்கும் இறைவனுக்கு நாம் வழங்கும் பதில்மொழியே நம் விசுவாசம். கடவுள் நம்முடன் பேசுவதை நாம் விவிலியத்தில் செவிமடுக்கிறோம். தன் மகன் இயேசுவின் வருகையில் தன் உச்சத்தைக்கண்ட இறைவெளிப்பாடுகளின் வரலாற்றை காட்டுகிறது விவிலியம். இறைவெளிப்பாடுகளின் வரலாற்றில் மையமாக நிற்பவர் ஆபிரகாமே. அவரே அனைத்து விசுவாசிகளுக்கும் தந்தையாகவும் எடுத்துக்காட்டாகவும் உள்ளார். இறைஆசீரால் பலம்பெற்றவராக, இறைவனின் வாக்குறுதிகளில் நம்பிக்கைக்கொண்டு, முன்பின் அறியாத இடம் நோக்கிப் பயணத்தைத் துவக்குகிறார் அவர். இவ்வுலகின் எண்ணங்கள் மற்றும் வழிகளுக்கு எதிராகச் செல்வதாகத் தோன்றினாலும், ஆபிரகாமைப்போல் நாமும் மீட்பளிக்கும் இறைவார்த்தைக்கு இயைந்தவகையில் விசுவாசத்தின் துணைகொண்டு நம் எண்ணங்களையும் செயலையும் வடிவமைக்க வேண்டும். இவ்வுலகின் உண்மை நிலைகளையும் தாண்டி, இறைவனின் பிரசன்னத்தையும், முடிவற்ற வாழ்வு குறித்த அவரின் வாக்குறுதிகளையும் நம் விசுவாசக் கண்ணால் கண்டுகொள்கிறோம். நாம் இறை ஆசீருக்கு நம்மைத் திறப்பதன் மூலம் நாமே பிறருக்கான ஆசீராக மாறுகிறோம்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.