2013-01-23 15:36:10

திருஅவைச் சட்டங்களைச் சீர்திருத்தும்போது, திருஅவையைக் குறித்த எண்ணங்களும் சீர்திருத்தம் பெறும் - முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான்


சன.23,2013. திருஅவைச் சட்டங்களைச் சீர்திருத்தும் பணியை மேற்கொள்ளும்போது, திருஅவையைக் குறித்த எண்ணங்களும் சீர்திருத்தம் பெறும் என்று முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் கூறியதை வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் நினைவு கூர்ந்தார்.
சனவரி 25ம் தேதி, வருகிற வெள்ளிக்கிழமையன்று திருஅவைச் சட்டங்களின் ஆய்வு நாளொன்று உரோம் நகரில் நடைபெறும் என்று திருஅவைச் சட்டங்களுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Francis Coccopalmerio இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அறிவித்தவேளையில், சட்டத் திருத்தங்களின் முயற்சிகளைத் துவக்கிவைத்த திருத்தந்தை 23ம் ஜானைக் குறித்துப் பேசினார்.
1983ம் ஆண்டு சனவரி 25ம் தேதி வெளியிடப்பட்ட திருஅவைச் சட்டத் தொகுப்பின் முப்பதாம் ஆண்டு நிறைவாக நடத்தப்படும் இந்த ஆய்வுக் கருத்தரங்கு, இரண்டாம் வத்திக்கான் சங்க 50ம் ஆண்டு நிறைவின்போது நடைபெறுவது மகிழ்வைத் தருகிறது என்று கர்தினால் Coccopalmerio எடுத்துரைத்தார்.
இவ்வெள்ளியன்று நடைபெறும் ஆய்வுக் கருத்தரங்கை Joseph Ratzinger அறக்கட்டளையும், இரண்டாம் ஜான்பால் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஅவைச் சட்டங்களுக்கானத் திருப்பீட அவையின் செயலர் ஆயர் Juan Ignacio Arrieta, மற்றும் Joseph Ratzinger அறக்கட்டளையின் தலைவர் பேராயர் Giuseppe Antonio Scotti ஆகியோரும் இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.