2013-01-22 15:40:36

விவிலியத்
தேடல் – உவமைகள்: ஓர் அறிமுகம் – பகுதி 3


RealAudioMP3 அண்மையில் நான் பார்த்து மகிழ்ந்த ஒரு திரைப்படம் OMG - Oh My God. இந்தி மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. கடவுள் நம்பிக்கையற்ற ஒருவருக்கும், கடவுள் நம்பிக்கையை மூலதனமாக்கி வர்த்தகம் செய்யும் மதத் தலைவர்களுக்கும் இடையே நிகழும் ஒரு நீதி மன்ற வழக்கு, இத்திரைப்படத்தின் கரு. கடவுள் நம்பிக்கையற்ற அம்மனிதரை கடவுளே நேரில் வந்து சந்திக்கிறார். நோயுற்ற அவரை குணமாக்குகிறார்; நீதிமன்ற வழக்கில் அவர் வெற்றி பெறவும் உதவுகிறார். கருத்தாழமிக்க வசனங்கள் கொண்ட திரைப்படம் இது. OMG - Oh My God திரைப்படத்திற்கு நான் விளம்பரம் செய்வதாக எண்ணவேண்டாம்.
இத்திரைப்படத்தின் இறுதிப்பகுதியில், கடவுள் நம்பிக்கையை வைத்து வியாபாரம் செய்யும் மதத் தலைவர், கடவுள் நம்பிக்கையற்றவரைச் சந்தித்து சொல்லும் வரிகள் நம் விவிலியத்தேடலை இன்று ஆரம்பித்து வைக்கின்றன: "நீ தற்போது வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். மக்கள் கடவுள்மீது அன்பு கொள்வதைவிட, அதிக அளவில் அச்சமே கொண்டுள்ளனர். இந்த அச்சத்தினால் மக்கள் மீண்டும் எங்களைத் தேடி வருவர். அப்போது, இந்த வழக்கில் நாங்கள் இழந்த தொகையை விட அதிகம் சம்பாதிப்போம்" என்று கூறுகிறார் அந்த மதத் தலைவர்.

கடவுள் மீது அன்பா? அச்சமா? என்ற கேள்வி உலகின் துவக்கம் முதல் மனிதரிடையே உலவி வருகிறது. இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் கடவுள்மீது அச்சம் மிக ஆழமாக வேரூன்றியிருந்தது. இந்த அச்சத்தை மூலதனமாக்கி, மதத் தலைவர்கள் அதிகாரம் செலுத்தி வந்தனர்.
இத்தகையச் சூழலில் தன் பணியைத் துவக்கினார் இயேசு. அவர் மக்களிடம் பேசிய விதமும், மதத் தலைவர்களிடம் பேசிய விதமும் வெகுவாக வேறுபட்டிருந்தன. இறை அச்சத்தை மக்களுக்கு அதிகமாய் ஊட்டி வளர்த்த மதத் தலைவர்களைப் பற்றியோ, அல்லது, அவர்களிடமோ, இயேசு பேசியபோது, கசப்பான உண்மைகளைக் கலப்படம் ஏதுமின்றி நேரடியாகச் சொன்னார்.

இயேசு கூறிய காரமான வார்த்தைகளை மத்தேயு 23ம் பிரிவு, மாற்கு 12ம் பிரிவு, லூக்கா 11ம் பிரிவு ஆகிய பகுதிகளில் நாம் வாசிக்கிறோம். மத்தேயு 23ம் பிரிவிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள்:
மத்தேயு 23 1-3
பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: மறைநூல் அறிஞரும் பரிசேயரும்... என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.

மத்தேயு 23 27-28
இயேசு கூறியது: வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.

மதத் தலைவர்களிடம் இவ்விதம் நேரடியாகப் பேசும் இயேசு, மக்களிடம் பேசுகையில் இறைவனைப் பற்றிய ஆழமான உண்மைகளை உவமைகள் வழியாகக் கூறினார். இறைவன் நம்மைப் பேணிக் காக்கும் தந்தை, அவர் மீது அச்சம் கொள்வதைவிட, அன்பு கொள்வதே மீட்பளிக்கும் என்ற உண்மைகளை உலகில் விதைக்க முயன்றார். இவ்வுண்மைகளை மக்கள் மனதில் ஆழமாய் வேரூன்றி வளர்ப்பது ஒன்றே இயேசு இவ்வுலகில் மேற்கொண்ட பணி என்று சொன்னாலும் மிகையாகாது. இதற்காக இயேசு பயன்படுத்திய கருவியே உவமைகள்... காலத்தால் அழியாமல் இன்றும் பயன்தரும் உவமைகள்.

இயேசு ஏன் உவமைகளில் பேசினார் என்ற கேள்விக்கு விவிலிய அறிஞர்கள் சொல்லும் காரணங்கள் பல. அவற்றில் முதன்மையான காரணம்... உவமைகளில் பேசுவது அன்றைய போதகர்களிடையே வழங்கிவந்த ஒரு பழக்கம். எனவே, இயேசுவும் அவ்வழியைப் பின்பற்றினார்.
பழைய ஏற்பாட்டில் நாம் காணும் பல இறைவாக்கினர்கள் உவமைகளில் பேசினர். இது இறைவன் அவர்களுக்கு வழங்கிய ஒரு தனிப்பட்ட கோடை அல்லது பணி என்றும் நாம் கருதலாம். பழைய ஏற்பாட்டின் ஒரு சில பகுதிகள் இந்த எண்ணத்தை விளக்கும்:
இறைவாக்கினர் ஒசேயா 12 : 10
ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: இறைவாக்கினர்களிடம் பேசினேன்: நானே காட்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்கினேன்: இறைவாக்கினர் வாயிலாக உவமைகளில் பேசினேன்.

இறைவாக்கினர் எசேக்கியல் 17 : 1-2
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! இஸ்ரயேல் வீட்டாருக்கு விடுகதையின் வடிவில் உவமை ஒன்று கூறு.

இறைவாக்கினர்களில் பலர் உவமைகளை வாய் வார்த்தைகளாகப் பேசினார்கள்; செயல்வடிவிலும் எடுத்துரைத்தார்கள். தவறிழைத்த மன்னன் தாவீதுக்கு உண்மையை எடுத்துரைக்க, இறைவாக்கினர் நாத்தான் கூறிய உவமையை சென்ற வாரம் நாம் சிந்தித்தோம்.
இஸ்ரயேல் மக்களுக்கும், இறைவனுக்கும் உள்ள உறவை எசாயா, எசேக்கியேல் போன்ற இறைவாக்கினர்கள் அழகான உவமைகளில் கூறியுள்ளனர். இஸ்ரயேல் குடும்பம் இறைவன் நட்டு வளர்த்த திராட்சைத் தோட்டம் என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். கண்ணும் கருத்துமாய் இறைவன் வளர்த்த இத்தோட்டம், இறுதியில் திராட்சைக் கனிகளுக்குப் பதில், காட்டுப் பழங்களைத் தந்ததென்றும் எசாயா தன் உவமையில் கூறுகிறார்:
இறைவாக்கினர் எசாயா 5 : 1-2, 7
என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப்பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்: செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக் கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார். என்று ஆரம்பமாகும் இந்த உவமையின் இறுதியில்,
படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே: அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே: நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்: ஆனால் விளைந்தோ இரத்தப்பழி: நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்: ஆனால் தழைத்ததோ முறைப்பாடு. என்று முடிக்கிறார்.

இறைவனை விட்டு அகன்று வாடிய இஸ்ரயேல் மக்களை இறைவன் மீண்டும் வலிமைமிகுந்த ஒரு குலமாகத் திரட்டுவார் என்ற கருத்தை இறைவாக்கினர் எசேக்கியேல் புகழ்பெற்ற ஓர் உவமையில் கூறியுள்ளார். உலர்ந்த எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்ட எசேக்கியேல், தான் கண்ட காட்சியை விவரிக்கிறார்.
இறைவாக்கினர் எசேக்கியேல் 37 1-2
ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன... அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.
என்று தன் உவமையை ஆரம்பிக்கும் இறைவாக்கினர் எசேக்கியேல், இறுதியில் அந்த எலும்புகள் எல்லாம் உயிர்கொண்ட படைவீரர்களாகத் திரண்டு எழுவதையும் அழகாக விவரிக்கிறார்.

இறைவாக்கினர் எசேக்கியேல் 37 10-12
எனவே ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர். அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும்... தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.
கலைநயம் மிகுந்த பல ஓவியங்கள், கவிதைகள் பிறக்க காரணமாக விளங்கும் இந்த உவமை, விவிலியத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஓர் உவமை எனக் கருதப்படுகிறது.

வாய் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், தங்கள் செய்கைகளாலும் இறைவாக்கினர்கள் உவமைகளைக் கூறினர். இறைவாக்கினர் எரேமியா நூல் 13ம் பிரிவில் இதற்கு ஓர் எடுத்துக்காட்டை நாம் காணலாம். கடவுளை விடுத்து வேறு பாதையில் செல்லும் இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை தரும் வண்ணம் இறைவாக்கினர் எரேமியா தன் உவமையைச் செய்கையால் காட்டுகிறார். இறைவன் தந்த கட்டளைப்படி, எரேமியா நார்ப்பட்டாலான இடைகச்சை ஒன்றை கட்டுகிறார். பின்னர் அந்தக் கச்சையைத் தன் இடுப்பிலிருந்து அகற்றி, மண்ணில் புதைக்கிறார். சில நாட்கள் சென்று அக்கச்சையை மீண்டும் அவர் எடுக்கும்போது, அந்தக் கச்சை எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.
இடையோடு சேர்ந்திருக்கும் கச்சை நல்ல முறையில் இருப்பதுபோல், இஸ்ரயேல் வீட்டாரும் இறைவனுடன் ஒன்றித்திருக்கும்வரையில் நன்மை பெறுவர். இறைவனைவிட்டு விலகினால், இற்றுப் போன கச்சையைப் போல் அவர்களும் பயனற்றுபோவர் என்பதை எரேமியா தன் செய்கை உவமையால் எடுத்துரைக்கிறார். இவ்விதம் சொல்லாலும், செய்கையாலும் உவமைகள் கூறிய இறைவாக்கினர்கள் வழியில் வந்த இயேசுவும் உவமைகள் வழியாக உண்மைகளைப் பகிர்ந்தார்.

இயேசு உவமைகளில் ஏன் பேசினார் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சீனக் கதை உதவும். சீனக் குரு தன் சீடர்களிடம், "வாழ்வில் மிகுந்த நிறைவைத் தருவது எது?" என்று கேட்டார். 'நல்ல உடல் நலம்', 'மகிழ்வான குடும்ப வாழ்வு', 'சிறந்த நண்பர்கள்' என்று சீடர்கள் பல பதில்களைத் தந்தனர்.
அவர்கள் தந்த பதில்கள் தவறு என்று கூறிய குரு, தொடர்ந்தார்: "நீங்கள் காட்டிய ஒரு வழியில், நம்பிக்கையுடன் ஒரு குழந்தை தானே நடந்து செல்வதைக் காண்பதுதான் வாழ்வில் மிகுந்த நிறைவைத் தரும்" என்று குரு சொன்னார்.
இயேசுவின் உவமைகளை இந்தக் கோணத்தில் நாம் சிந்திக்கலாம். வாழ்வென்ற பாதையில் தடுமாறிக் கொண்டிருக்கும் குழந்தைகளான நாம் நம்பிக்கையுடன் நடக்க வழிகாட்டுவன, இயேசுவின் உவமைகள்...

உவமைகளின் அறிமுகம் தொடரும்.








All the contents on this site are copyrighted ©.