2013-01-21 15:28:28

வாரம் ஓர் அலசல் – வாழ்க்கை ஒரு மாயக்கணக்கு


சன.21,2013. RealAudioMP3 மரணதண்டனைக் கைதிகளும், ஆயுள் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ள அந்தச் சிறைச்சாலையின் சுற்றுப்புறச் சுவர் அதிக உயரமானது. அந்தச் சுவருக்கு மேலே இரண்டு அடிக்கு மின்சார வேலியும் போடப்பட்டிருந்தது. அந்தச் சுவரின் ஆபத்து தெரியாமல் கைதிகள் யாரும் சுவர் ஏறித் தப்பித்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக, சிவப்பு நிறத்தில் கொட்டை எழுத்துக்களில், “ஆபத்து! ஜாக்கிரதை! இங்கு மின்வேலியில் 1,500 வோல்ட் மின்சாரம் பாய்கிறது” என்று பல இடங்களில் எழுதப்பட்டிருந்தது. அன்று அமாவாசை கும் இருட்டு. அந்தச் சிறைச்சாலைக்கு புதிதாக வந்த மரணதண்டனை கொலைக் குற்றவாளி ஒருவர், அன்று அந்த மின்வேலிச் சுவரைத் தாண்டித் தப்பித்துச் சென்றுவிட்டார். அந்தக் கைதியின் நல்ல நேரம் அவரது உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை. கைதிகள் இறந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த மின்வேலியில் மின்சாரம் பாய்வதை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்தது வேறொரு கதை. ஆனால் மற்ற கைதிகளுக்கு எல்லாம் ஒரே கேள்விக்குறி. ஆபத்து! மரணம்! என்று இந்தச் சுவரில், இத்தனை இடங்களில், இவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டிருந்தும் எப்படி இவன் உயிரோடு தப்பினான்?, இந்தத் துணிச்சல் இவனுக்கு எப்படி வந்தது? என்று மற்ற கைதிகள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். காரணம் மிக எளிதானது. அந்த மரணதண்டனைக் கைதிக்கு எழுத வாசிக்கத் தெரியாது. எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் யாரும் அந்தச் சிறையிலிருந்து தப்பியதே இல்லையாம்.
அன்பு நெஞ்சங்களே, இந்த மரண தண்டனைக் கைதி உயிரோடு தப்பித்த நிகழ்வைக் கேட்கும்போது மனித வாழ்க்கை குறித்து பல எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். மனித வாழ்க்கையின் கணக்கு கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. கூட்டலும் கழித்தலும் பெருக்கலும் வகுத்தலும் கொண்ட இந்த வாழ்க்கையில், திரைப்பட வசனங்கள் போன்று, எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியாகத்தான் வரும். ஒவ்வொருவரும் தங்களது திறமைகளைக் கூட்டி, தவறுகளைக் கழித்து, உழைப்பைப் பெருக்கி, காலத்தை வகுத்துச் செயல்பட்டால் உலகின் நூறு பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நாமும் இணைந்து விடலாம். இந்த நூறு பணக்காரர்கள் 2012ம் ஆண்டில் திரட்டிய மொத்த வருமானம் 24 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர். அதேசமயம் உலகில் மிக வறிய மக்கள், ஒரு நாளைக்கு 1.25 டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்ந்தனர் என்று, Oxfam என்ற பன்னாட்டு இடர்துடைப்பு நிறுவனம் கடந்த வாரத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு வெற்றிக்கனியை எட்டலாம் என்பதற்கு ஒரு கூட்டல் கழித்தல், பெருக்கல் வகுத்தல் வாய்ப்பாடு இருந்தாலும்கூட, சில மாயக் கணக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் கணக்குகளில் சரியானது தவறாகவும், தவறானது சரியாகவும் விடையைச் சொல்லி விடுகின்றன. இம்மாதம் 10ம் தேதி சவுதி அரேபியாவில் Rizana Nafeek என்ற இலங்கை இளம்பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் செயல் மொத்த உலகத்தையும் பதற வைத்திருக்கிறது. திறந்தவெளி மைதானம் ஒன்றில், நூற்றுக்கணக்கானவர்கள் சூழ்ந்து நிற்க, அந்தப் பெண்ணை மண்டியிட வைத்து, மதச் சம்பிரதாயங்களை முடித்து, பின்னர், பளபளக்கும் வாள் ஒன்றால், ஒரே வெட்டில் அவரின் தலை துடிதுடித்துத் தரையில் வீழ்ந்துள்ளது. இது காட்டுமிராண்டிகளின் நரபலி அல்ல. நவீன உலகத்தில் சட்டப்படி வழங்கப்பட்டு இருக்கும் 'நீதி’, துண்டிக்கப்பட்ட நீதி! என்று ஓர் ஊடகம் குறிப்பிட்டிருந்தது. சவுதி அரேபியாவில் 45 இந்தோனேசிய பணிப்பெண்கள் உட்பட ஏறக்குறைய ஐம்பது வெளிநாட்டுப் பணிப்பெண்கள் மரண தண்டனைக் கைதிகளாக உள்ளனர் என்றும், அந்நாட்டில் 3,75,000 இலங்கையர் உட்பட ஏறத்தாழ 15 இலட்சம் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் வீட்டுவேலை செய்கின்றனர் என்றும் மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
இலங்கையின் மூதூரில் மிக வறிய குடும்பத்தில் பிறந்த Rizana, 17 வயதில் சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலை செய்தது வெறும் 18 நாட்கள்தான். ஆனால், அவர் சிறையில் இருந்ததோ ஏழு ஆண்டுகள். Rizana எழுதிய கடிதத்தில்...
“அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டில் யாரும் இல்லை. நான் வேலை செய்த அந்த வீட்டுத் தலைவியின் நான்கு மாதக் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுத்துக்கொண்டு இருந்தேன். திடீரென்று குழந்தையின் மூக்கில் இருந்து பால் வடிந்தது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தொண்டையைத் தடவிக்கொடுத்தேன். மூக்கில் இருந்து பால் வடிவது நின்றுவிட்டது. குழந்தை அயர்ந்து தூங்குகிறது என்று நினைத்து படுக்க வைத்தேன். வெளியில் சென்றிருந்த அந்த அம்மா வீட்டுக்கு வந்ததும் குழந்தையைப் பார்த்தார். குழந்தை இறந்திருந்தது. உடனே, என்னைச் செருப்பால் அடித்தார். எனக்கு முகத்தில் இரத்தம் வழிந்தது. காவல்துறையில் பிடித்துக்கொடுத்தார். அவர்கள் ஓர் அறையில் அடைத்து வைத்து என்னை அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கினார்கள். கடவுள்மீது ஆணையாகச் சொல்கிறேன்... நான் அந்தக் குழந்தையைக் கொலை செய்யவில்லை''
Rizana வாழ்க்கையில் நீதிக்கணக்கு எங்கே? அது Sharia என்ற இசுலாமியச் சட்டத்துக்குள் மாயமாக மறைந்து விட்டது. ஒரு நாட்டின் சட்டங்கள் எதுவாக இருந்தாலும், அவை மக்களை நெறிப்படுத்தவும், அவர்களுக்கு நீதி வழங்கவும்தான் இருக்கின்றன. அப்படியானால், மூதூர் வீதிகளில் பித்துப் பிடித்ததுபோல் அலையும் ரிஸானாவின் தாய் பரீனாவுக்கு யார் நீதி வழங்குவது? இதய நோயாளியான ரிஸானாவின் தந்தை நபீக்குக்கு என்ன ஆறுதலைச் சொல்ல முடியும்? இதோ, இதே இலங்கையில் சந்தியா என்பவர், 2010ம் ஆண்டு சனவரியில் காணாமல் போயுள்ள தனது கணவர் பிரகீத் ஏக்னலிகொடாவுக்கு(Prageeth Eknaligoda) நீதி கிடைக்குமா என்று கேட்டுள்ளார். இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக Mohan Peiris நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போன செய்தியாளர் Eknaligoda சம்பந்தமான வழக்கு விசாரணைகளில் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக Eknaligodaவின் மனைவி சந்தியா தெரிவித்துள்ளார்.
அன்பர்களே, சிலரின் வாழ்க்கைக் கணக்குகள், தவறாக இருக்கும்போது சரியாகவும், சரியாக இருக்கும்போது தவறாகவும் தீர்ப்புகளாக எழுதப்பட்டு விடுகின்றன. Rizana Nafeekன் வாழ்க்கைக் கணக்கு தவறாகத் தீர்ப்பிடப்பட்டிருப்பதாகவே மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள். அதேநேரம், மனிதர்களின் வாழ்க்கையில் நியாயமான கணக்குகளும் தீர்ப்புகளாக எழுதப்படுகின்றன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டத்தின்கீழ் அநியாயமாய்க் குற்றம்சுமத்தப்பட்ட Rimsha Masih என்ற சிறுமி, குற்றமற்றவர் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருக்குர்ஆன் விளக்க நூலின் பக்கங்களை எரித்தார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட மாற்றுத் திறனாளியான Rimsha Masihயை, கடந்த நவம்பரில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இருப்பினும், Rimsha Masihயின் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று இசுலாமிய அடிப்படைவாதிகள் சிலர் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, கடந்த புதனன்று இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு ஆரம்பித்த முதல் அமர்வின் முடிவிலேயே Rimsha Masih குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அன்பு நெஞ்சங்களே, மற்றவர்களால் நமது வாழ்க்கைக் கணக்குகள் தவறாக எழுதப்படலாம். ஆனால் நமது வாழ்க்கைக் கணக்குகளைச் சரியாகச் செய்வதற்கான வழிகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவரவர் வாழ்வு அவரவர் கையில்தான் இருக்கின்றது. பல நேரங்களில் உணர்ச்சிகளுக்கு வசப்பட்டுப் பல முடிச்சுக்களைப் போட்டுப் பல சிக்கல்களை நமக்கு நாமே உருவாக்குகிறோம். வேகமான தீர்வு என மேலும் அவற்றில் சிக்கி விடுகிறோம். ஒரு சமயம் புத்தர் குனிந்தபடியே ஒரு சிறு துணியில் முடிச்சுக்களைப் போட்டுக் கொண்டிருந்தார். அவருடைய போதனையைக் கேட்க வந்த சீடர்கள் புத்தரின் செயலைப் பார்த்து மவுனமாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து தலைநிமிர்ந்த புத்தர் தம் சீடர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் பேசத் தொடங்கினார்...
“இதோ, இந்தத் துணி நான் கொண்டு வந்தது. இதில் நான் ஐந்து முடிச்சுக்களைப் போட்டிருக்கிறேன். இந்தத் துணி நான் கொண்டு வந்தபோது இருந்த துணிதானா? அதே துணிதான் என்றால் இதில் முடிச்சுக்கள் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதானா?” என்று கேட்டார் புத்தர். அப்போது சீடர் ஆனந்தா, “இரண்டும் ஒரே துணிதான். முடிச்சுக்கள் இல்லாதபோது அது ஒரு குழந்தையின் மனதுபோல நிர்மலமாய் இருந்தது. ஆனால் அதில் முடிச்சுக்களைப் போட்ட பின்னர், பந்த பாசங்களில் உழலும் மனம்போல் அது களங்கப்பட்டு உள்ளது” என்றார். அதற்கு புத்தர், “சரியாகச் சொன்னாய் ஆனந்தா. நாம் அனைவரும், ஆசை பாசம் என்ற முடிச்சுக்களில் சிக்கி, தனிமைப்பட்டு, உணர்ச்சிக் கடலாகி அதிலே அடித்துக் கொண்டு போகப்படுகிறோம். சரி, இப்போது இந்த முடிச்சுக்களை மீண்டும் அவிழ்க்க வேண்டுமே” என்றார். அதற்கு சாரிபுத்தன் என்ற சீடர், “சுவாமி, முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டுமானால் முதலில் அதனருகில் சென்று அவை எந்தவிதமாய்ப் போடப்பட்டுள்ளன என்று பார்த்து அதே விதத்தில் அவிழ்க்க வேண்டும். அப்போதுதான் அந்தத் துணி பாதிக்கப்படாமல் அவற்றை அவிழ்க்க முடியும். அதோடு முடிச்சுக்களை வேகமாக அவிழ்த்தால் துணி கிழிந்து விடும்” என்றார். அதற்கு புத்தர், “உண்மைதான். துணி முடிச்சுக்கள் நம் கண்களுக்குத் தெரியும். ஆனால் மனதிலுள்ள முடிச்சுக்கள் நம் கண்களுக்குப் புலனாகுவதில்லை. மனதை நெருங்கிப் பார்த்துச் சிக்கல்களை உணராதவரை வாழ்வின் முடிச்சுக்களை அவிழ்க்க முடியாது” என்று சொன்னார்.
வாழ்வில் முடிச்சுக்கள் ஏற்படுவதே நம்மால்தான். எனவே அதற்கான தீர்வும் நம் கையில்தான் இருக்கின்றது. நமது துணிகளை வெளுப்பதற்கு வழிகள் தெரியும் நமக்கு, நமது மனங்களை வெளுப்பதற்குரிய வழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கைக் கணக்கு, மந்திரமாயக் கணக்காக இல்லாமல் உண்மைக் கணக்காக உலா வரும்.







All the contents on this site are copyrighted ©.