2013-01-21 15:56:23

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் அமைதிக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


சன.21,2013. கிறிஸ்தவர்கள் மத்தியில் காணக்கூடிய விதத்தில் ஒன்றிப்பு ஏற்படாமல் இருப்பது, குறிப்பாக, இன்னும் சரிசெய்யப்படாமல் இருக்கின்ற, கிறிஸ்தவர்களைப் பிரித்துள்ள வரலாற்று பிரிவினைகள், திருஅவையின் முகத்தை உருவிழக்கச் செய்யும் மிகக் கடுமையான பாவங்களில் ஒன்று என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இம்மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை உலகின் கிறிஸ்தவ சபைகளில் சிறப்பிக்கப்பட்டுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ சபைகளுக்கிடையே முழுமையான ஒன்றிப்பு ஏற்படுவதற்கான ஆவலைத் தட்டி எழுப்புவதற்கும், இவ்வொன்றிப்புக்குத் தங்களை அர்ப்பணிப்பதற்கும் எல்லா விசுவாசிகளையும், எல்லாக் கிறிஸ்தவச் சமூகங்களையும் இந்த ஒன்றிப்பு வாரம் வரவேற்கும் தருணமாக இருக்கின்றது என்று கூறினார்.
கடந்த மாதத்தில், ஆயிரக்கணக்கான ஐரோப்பிய இளையோருடனும், Taize கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவுடனும் வத்திக்கானில் தான் செபித்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, அந்நேரம், மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அருளின் நேரமாக இருந்தது, அந்நேரத்தில் ஒரே கிறிஸ்துவின் உருவில் இருப்பதன் அழகை நாம் அனுபவித்தோம் என்றும் கூறினார்.
இந்தியாவிலுள்ள கிறிஸ்தவச் சமூகங்களால் பரிந்துரை செய்யப்பட்ட, “நம் ஆண்டவர் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்?” என்ற இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார மையக் கருத்தைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்துவில் நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற முறையில், எந்தவிதமான அநீதியானப் பாகுபாடுகள் களையப்படவும், கிறிஸ்தவர்கள் மத்தியில் காணக்கூடிய விதத்தில் ஒன்றிப்பு ஏற்படவும் ஒன்றிணைந்து செபிக்குமாறு ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துவதாகவும் கூறினார்.
உலகில் இடம்பெறும் அனைத்துவிதமான சண்டைகளும், அப்பாவிக் குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதும் நிறுத்தப்படவும், போரிடும் தரப்புகள் உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கானத் துணிவைப் பெறவும் வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் அமைதிக்காக நாம் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், கானாவூர் திருமண விருந்தில் நடைபெற்ற புதுமை குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றியும் மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை, மனிதர்களுக்கு எப்போதும் தூய்மைப்படுத்துதல் தேவைப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.