2013-01-19 15:28:18

சிரியாவில் அழிவை உண்டாக்கக்கூடிய வன்முறைக்கு வெளிநாடுகளின் ஆதரவே காரணம், முதுபெரும் தலைவர் குற்றச்சாட்டு


சன.19,2013. சிரியாவில் அமைதியான முறையில் தொடங்கிய “அரபு வசந்தம்” என்ற சனநாயகத்திற்கான எழுச்சி, தற்போது அந்நாட்டில் கடும் சண்டையாக உருவெடுத்திருப்பதற்கு, அமெரிக்க ஐக்கிய நாடும், ஐரோப்பிய சமுதாய அவையும், வளைகுடா நாடுகளும் பெரிய அளவில் காரணமாக இருக்கின்றன என, அந்தியோக்கியாவின் கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Ignatius III Younan குறை கூறினார்.
சிரியாவில் சண்டையிடும் புரட்சிக் குழுக்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றியும், சிரியாவின் Assad ஆட்சிக்கு மாற்றான உறுதியான ஆட்சியை அமைப்பதற்கு இயலாதவர்களாயும் இருக்கின்றபோதிலும், இந்த வெளிநாடுகள், புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி அவைகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கின்றன எனவும் முதுபெரும் தலைவர் Ignatius குற்றம் சாட்டினார்.
சிரியாவில் பல மாதங்களாக இடம்பெற்றுவரும் சண்டை குறித்துப் பேசிய முதுபெரும் தலைவர் Ignatius, வன்முறை மற்றும் காழ்ப்புணர்வால் நிறைந்துள்ள சிரியாவில் தற்போது, சிறுபான்மை Alawi பிரிவு இசுலாமியருக்கும், பெரும்பான்மை சுன்னிப் பிரிவு இசுலாமியருக்கும் இடையே கடும் சண்டை இடம் பெற்று வருகிறது என்று கூறினார்.
சிரியாவின் எதிர்கால அமைதிக்கு சிறந்த நம்பிக்கையாக கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதால், கிறிஸ்தவர்கள் சிரியாவில் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொண்டார் முதுபெரும் தலைவர் Ignatius.







All the contents on this site are copyrighted ©.