2013-01-19 15:35:49

சமத்துவமின்மையைப் போக்குவதற்குப் புதிய யுக்திகளைக் காணுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு


சன.19,2013. இப்பூமியில் மிக வறிய மக்களின் ஏழ்மையைக் குறைப்பதற்குப் போதுமான அளவுக்கு நான்கு மடங்குக்கு மேலாகவே உலகின் நூறு கோடீஸ்வரர்கள் கடந்த ஆண்டில் சம்பாதித்துள்ளார்கள் என்று ஆக்ஸ்ஃபாம் என்ற அனைத்துலக பிறரன்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
வரும் வாரத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளாதார மாநாட்டையொட்டி இவ்வாறு அறிவித்துள்ள ஆக்ஸ்ஃபாம் நிறுவனம், உலகில் நிலவும் சமத்துவமின்மையைக் களைவதற்கு உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிகப்படியான செல்வம், பொருளாதார ரீதியாகத் திறனற்றது, அரசியல்ரீதியாக ஆபத்தானது, சமூகரீதியாகப் பிளவுகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
உலகின் நூறு கோடீஸ்வரர்கள், 2012ம் ஆண்டில், 24,000 கோடி டாலரை அனுபவித்தவேளை, மிக வறிய மக்கள், ஒரு நாளைக்கு 1.25 டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்ந்தார்கள் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
Oxfam என்பது, ஏறக்குறைய 90 நாடுகளில் செயல்படும் 17 பிறரன்பு நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பாகும். உலகில் பசி மற்றும் அநீதி தொடர்புடைய விடயங்களுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது. இது முதலில் 1942ம் ஆண்டில் பிரிட்டனில் தொடங்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.