2013-01-18 15:06:48

கச்சின் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துமாறு மியான்மார் கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்


சன.18,2013. மியான்மார் நாட்டின் கச்சின் மாநிலத்தில் அரசுப் படைகளால் நடத்தப்பட்டுவரும் வான்வீச்சுக் குண்டுத் தாக்குதல்களும், துப்பாக்கிச்சூடுகளும் நிறுத்தப்பட்டு அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்துமாறு அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரு வயதான வேதியர் உட்பட பல அப்பாவி மக்கள் உயிரிழப்புக்குக் காரணமாகியுள்ள இவ்வன்முறை நிறுத்தப்படுமாறும், போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கு அனைத்துலகப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுமாறும் கேட்டுள்ளனர் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.
மியான்மாரில் சண்டையிடும் குழுக்கள் அனைவரும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறும், தேவைப்பட்டால் இடைநிலையாளரின் உதவியைக் கேட்குமாறும் கூறியுள்ள அத்தலைவர்கள், அந்நாட்டில் அமைதி இயலக்கூடியதே என்றும் கூறியுள்ளனர்.
17 ஆண்டுகால வன்முறையை முடிவுக்குக் கொண்டுவந்த 2011ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கச்சின் மாநிலத்தில் தற்காலிகக் குடியிருப்புக்களில் அடைக்கலம் தேடியுள்ளனர் என்றும் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.