2013-01-18 15:20:52

WHO நிறுவனம் : தட்டம்மை நோய் உலகில் மீண்டும் சிலபகுதிகளில் தாக்கியிருப்பது இந்நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கு அச்சுறுத்தல்


சன.18,2013. தட்டம்மையினால் இறப்போரின் எண்ணிக்கை, கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் குறிப்பிடத்தகும் வகையில் குறைந்திருக்கின்ற போதிலும், சில பகுதிகளில் இந்நோய் மீண்டும் பெருமளவில் தாக்கியிருப்பது இந்நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்தது.
தட்டம்மையினால் இறப்போரின் எண்ணிக்கை 2,000த்துக்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் 5 இலட்சத்து 42 ஆயிரத்திலிருந்து, ஒரு இலட்சத்து 58 ஆயிரமாகக் குறைந்தது, அதேசமயம் அதே காலக்கட்டத்தில் இந்நோயினால் புதிதாகப் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் 58 விழுக்காடாகக் குறைந்தது என்று WHO நிறுவனத்தின் புதிய புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
எனினும், சில பகுதிகளில் ஏறக்குறைய இரண்டு கோடிச் சிறார்க்கு இந்நோய்க்கானத் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்றும், இவர்களில் பாதிப்பேர், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர் என்றும் WHO நிறுவனம் கூறியது.
இந்தியாவில் மட்டும் 67 இலட்சம் சிறார், தட்டம்மைக்கெதிரானத் தடுப்பூசிகள் போடப்படாமல் உள்ளனர் எனவும் WHO நிறுவனம் எச்சரித்துள்ளது.
தட்டம்மை நோய் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிரான்ஸ், இத்தாலி, இஸ்பெயின் உட்பட 5 நாடுகளில், 2011ம் ஆண்டில் இந்நோய் மீண்டும் பரவியது.







All the contents on this site are copyrighted ©.