2013-01-17 15:56:23

பேராயர் தொமினிக் மம்பர்த்தி - திருஅவையும் உலக அரசுகளும் தங்களுக்கே உரிய உரிமைகளைக் கொண்டிருக்கின்றன


சன.17,2013. திருஅவையும் உலக அரசுகளும் தங்களுக்கே உரிய உரிமைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை இரு தரப்பினரும் உணரவேண்டும் என்று வத்திகான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மத உரிமை, மனச்சான்று ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஐரோப்பிய நீதி மன்றம் இச்செவ்வாயன்று வழங்கியுள்ள தீர்ப்பைக் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி இவ்வாறு கூறினார்.
பிரித்தானியாவில், இருவர் தங்கள் கழுத்தைச் சுற்றி சிலுவை அணிந்ததற்கு அவர்கள் பணிபுரிந்து வந்த நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல், ஓரினத் திருமணத்தை மனசாட்சியின் அடிப்படையில் ஏற்க மறுத்த இருவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
மத உரிமைகள் என்பது எதையும் செய்வதற்கான அனுமதி என்பது தவறான கருத்து என்பதை விளக்கிய பேராயர் மம்பர்த்தி, அதேவேளையில், அரசுகளும் மதம் சார்ந்த விடயங்களில் தங்கள் சக்தியைக் காட்டுவது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.
மேற்கத்தியக் கலாச்சாரத்தில் பெருகிவரும் சுயநலப் போக்கு, மற்றும் மத சார்பற்ற நிலை, அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதும் கவலைதரும் ஒரு போக்கு என்று பேராயர் மம்பர்த்தி விளக்கினார்.








All the contents on this site are copyrighted ©.