2013-01-17 15:40:23

கற்றனைத்தூறும்..... பாபிலோனின் தொங்கும் தோட்டம்


சன.17,2013. பாபிலோனின் தொங்கும் தோட்டம் உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகும். இது, ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்கு முன்னர், கி.மு.600ம் ஆண்டில், 43 ஆண்டுகள் பாபிலோனின் அரசராக ஆட்சி செய்த 2ம் நெபுகத்னேசரால் கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. பாபிலோன் சமதளமான, வறண்ட பூமி. சிறிதளவு மழையே பெய்யும். பசுமையையும் அதிகமாகக் காண முடியாது. ஆனால் நெபுகத்னேசரின் மனைவி Amytisன் சொந்த ஊர் மலைப்பாங்கான, எப்பொழுதும் பசுமையாகக் காணப்படும். எனவே Amytis பாபிலோன் வந்தபின்னர் எப்பொழுதும் தனது ஊரை நினைத்துக் கொண்டிருந்ததால் அவருக்கென மிகப் பெரிய தோட்டம் ஒன்றை அமைத்தார் நெபுகத்னேசர். Amytis வாழ்ந்த தோட்டத்தைப் போன்று, இத்தோட்டமும் பலவகையான மலர்கள், கனிகள், விலங்குகள், மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கொண்டதாய் இருந்தது. உலகம் முழுவதிலிமிருந்து இவை கொண்டுவரப்பட்டன. இத்தோட்டம், ஈராக்கின் பாக்தாத் நகருக்குத் தெற்கே ஏறக்குறைய முப்பது மைல்கள் தூரத்தில் யூப்ரட்டீஸ் நதிக்கரையோரத்தில் அமைக்கப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் இந்தப் பாபிலோனின் தொங்கும் தோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. இது அழியாமல் இருந்திருந்தால் உலகின் ஏழு அதிசயங்களுள் இரண்டாவது பழமையான அதிசயமாக இருந்திருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஸ்ட்ராபோ(Strabo), தியோதோருஸ் சிகுலஸ்(Diodorus Siculus) போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் விவரித்துள்ளபடி, இந்தத் தோட்டம், அடுக்கு பிரமிடுபோல் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய கலைநுட்பம், அக்காலத்தில் மத்திய கிழக்கில் பொதுவான கலைநுட்பமாக இருந்தது எனத் தெரிய வருகிறது. அண்மையில் யூப்ரட்டீஸ் நதிக்கரையோரங்களில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியில், 25 மீட்டர் உயரமான தடித்த, கனமான சுவர்களும், விதைகள் பரவிக்கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வராய்ச்சிகள், பாபிலோனின் தோட்டம் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன. ஏனெனில் இத்தகைய தோட்டம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் சிலர் முன்னர் கூறியிருந்தனர்.
குன்றில், பல்வேறு மட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இத்தோட்டத்தில் செடிகளும் மலர்களும் மட்டுமல்லாமல், தண்ணீர் ஊற்றப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் வியப்பாக இருக்கிறது. பல்வேறு மட்டங்களிலுள்ள இந்தத் தோட்டம் மிக உயரமாக உள்ளது. எப்போதாவது மழை பெய்யும் பாபிலோனியாவில் நீர்வீழ்ச்சிகளை எப்படி அமைத்தார்கள், இந்தச் செடிகளுக்கு எப்படித் தண்ணீர் ஊற்றினார்கள் என்பது வியப்பாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.