2013-01-17 16:09:37

ஊடகச் சுதந்திரத்தில் இந்தியா 131வது இடம், இலங்கை 163வது இடம்


சன.17,2013. 2011–2012ம் ஆண்டுகளை அடிப்படையாகக் வைத்து ஊடகச் சுதந்திரம் பற்றி, எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் (Reporters without Borders) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசையில் இலங்கை 163வது இடத்தில் உள்ளது.
179 நாடுகள் அடங்கிய இத்தரவரிசை பட்டியலின்படி, உலகில் சிறப்பான ஊடகச் சுதந்திரம் நிலவும் நாடாக பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, நார்வே, எஸ்தோனியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.
இவ்வியாழனன்று வெளியான இப்பட்டியலில் இந்தியா 131வது இடத்தையும், பாகிஸ்தான் 151வது இடத்தையும் பெற்றுள்ளன. உலகில் மிகவும் மோசமான ஊடகச் சுதந்திரம் நிலவும் நாடாக எரித்திரியா விளங்குகின்றது. இது 179வது இடத்தில் உள்ளது.
எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு 2002ம் ஆண்டு தயாரித்திருந்த பட்டியலில் இலங்கை 51வது இடத்தினைப் பெற்று, ஊடகச் சுதந்திரத்தில் முன்னேறிய நாடாகக் கருதப்பட்டது.
எனினும், கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இலங்கையில் ஊடகச் சுதந்திரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால், அந்நாடு 163வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.