2013-01-16 15:23:25

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


சன.16, 2013. இத்தாலியின் உரோம் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டிருக்க, பனி எப்போது பொழியத் துவங்கும் என உரோம் நகரமும் காத்துக்கொண்டிருக்க, செவ்வாய் இரவு துவங்கிய மழை இடைவிடாமல் புதன் காலையும் பெய்துகொண்டேயிருந்தது. இந்த மழையின் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் திருப்பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும் வத்திக்கானிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தை நிறைத்திருக்க, இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறிய காலம் கிறிஸ்து பிறப்பின் காலம் என்பதை மையமாக வைத்து தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இஸ்ராயேல் மக்களுக்கு இறைவன் தன்னையே வெளிப்படுத்தி வந்ததன் உச்சக்கட்டமாக அவர் மனுவுரு எடுத்த மறையுண்மையை கிறிஸ்து பிறப்புக் காலத்தில் நாம் கொண்டாடினோம். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு, மோசே மற்றும் ஏனைய இறைவாக்கினர்கள் வழி வெளிப்படுத்தப்பட்டவைகள் மூலம் உயிரோட்டமாக வைக்கப்பட்டிருந்தது. வார்த்தை மனுவுருவான இயேசு, உண்மையிலேயே நம்மிடையே குடிகொண்டிருக்கும் கடவுள். அவரே நமக்காகப் பரிந்து பேசுபவர் மற்றும் அனைத்து வெளிப்பாடுகளின் மணிமகுடம். அவரில் தொன்மைகால ஆசீர் நிறைவைக் கண்டது. கடவுள் தன் முகத்தை நம்மீது ஒளிரச் செய்தார். மனுவுரு எடுத்த இறைமகனும், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான பரிந்துரையாளருமான இயேசு, இறைவனைக் குறித்து நம்மிடம் பேசமட்டும் செய்யவில்லை, மாறாக, இறைமுகத்தை நமக்குக் காட்டி, இறைவனை 'தந்தை' என அழைக்க நமக்குத் தகுதியை வழங்குகிறார். அவரே தன் சீடர் பிலிப்புவிடம் கூறினார், 'என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்'(யோவான் 14:9) என்று. செபம் வழி இறைவனுடன் நாம் தினம் கொள்ளும் தொடர்பு, அவரின் வார்த்தைகளைத் தியானித்தல், திருநற்கருணை ஆகியவைகளின் வழியாக கடவுளின் முகத்தைப் பார்ப்பதற்கான நம் பேரார்வம் வளர்வதாக. இவ்வாறு, நாம் இறைவனின் முடிவற்ற அரசின் முழுமையில் அவரின் முக ஒளி குறித்து ஆழ்ந்து தியானிக்க நம்மைத் தயாரிப்போமாக, என உரை வழங்கினார் திருத்தந்தை.
இவ்வாரம் துவங்க உள்ள ‘கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செப வாரம்’ குறித்தும் தன் பொது மறைபோதகத்தின் இறுதியில் எடுத்தியம்பிய திருத்தந்தை, இறைச்சீடர்கள் அனைவரிடையேயும் ஒன்றிப்பு எனும் மிகப்பெரும் கொடையை இறைவன் வழங்கவேண்டும் என செபிப்போம் என்ற அழைப்பையும் விடுத்தார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.