2013-01-15 15:01:55

விவிலியத்தேடல் - உவமைகள் ஓர் அறிமுகம் – பகுதி 2


RealAudioMP3 இப்புத்தாண்டின் முதல் விவிலியத் தேடலாக, சென்ற வாரம் இயேசுவின் உவமைகள் என்ற புது முயற்சியை ஆரம்பித்தோம். கதைகளுக்கு, உவமைகளுக்கு உள்ள சக்தியைப்பற்றி சென்ற விவிலியத்தேடலில் சிந்திக்க ஆரம்பித்தோம். இன்று தொடர்கிறோம். அண்மையில் என் மனதில் பதிந்த இரு சிறு உவமைகளுடன் இன்றையத் தேடலை நாம் ஆரம்பிக்கிறோம்.

பள்ளியிலிருந்து திரும்பிவரும் சிறுவன் தன் தாயைக் கட்டி அணைக்க ஓடுகிறான். அவர்கள் வாழும் அடுக்குமாடி கட்டிடத்தின் காவலாளி அந்நேரம் அங்கு வந்து, "அம்மாவை அணைப்பதற்கு இது நேரமல்ல" என்று சிறுவனைத் தடுக்கிறார்.
இந்த வரிகள் கடந்த இரு மாதங்களாய் என் மனதில் மீண்டும், மீண்டும் வலம்வந்து கொண்டிருக்கின்றன.
‘No one should stand between you and God’ அதாவது, 'உனக்கும் கடவுளுக்கும் இடையே யாரும் குறுக்கிடக்கூடாது' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை நவம்பர் மாதம் ஓர் இந்தியச் செய்தித்தாளில் வெளியானது. Vikram Bhatt என்ற திரைப்படக் கலைஞர் எழுதிய இக்கட்டுரையில் மனிதருக்கும் கடவுளுக்கும் இடையே வளரக்கூடிய, வளர வேண்டிய உறவைப்பற்றி அழகாகக் கூறியுள்ளார். கடவுளைச் சந்திக்கச் செல்லும் மனிதர்களுக்குத் தடையாக இருப்பவர்கள் ஆலயங்களில் இருக்கும் குருக்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இக்கருத்தை வலியுறுத்தவே அவர் அம்மா, மகன், காவலாளி என்ற அந்த உவமையைப் பயன்படுத்தியுள்ளார். கடவுளைச் சந்திக்கச் செல்வோரை வரிசையில் நிறுத்தும் விதிமுறைகள், பணம் இருந்தால் வரிசைகள் தேவையில்லை என்ற விதிவிலக்கு... என்று கோவில்களில் காணப்படும் குறைகளை இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய அத்தனைக் கருத்துக்களும் என் மனதில் பதிந்தனவா என்பது சந்தேகம்தான். ஆனால், அவர் பயன்படுத்தியுள்ள அம்மா, மகன், காவலாளி என்ற உருவகம் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இதேபோல், வருடத்தின் இறுதி நாட்களில் என் மனதில் பதிந்த மற்றொரு உருவகம்...
காட்டின் ஏதோ ஒரு மூலையில் கீழே விழும் ஒரு மரம் பெரும் சப்தத்தை எழுப்புகிறது. ஆனால், அதேநேரம், காட்டில் பல்லாயிரம் மரங்கள் ஒவ்வொரு நாளும் சப்தமேதுமின்றி, அமைதியாக வளர்ந்து வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், கடந்துசெல்லும் ஆண்டைத் திரும்பிப்பார்க்கும் பழக்கம் ஊடகங்களுக்கு உண்டு. அவ்விதம் திரும்பிப்பார்க்கும் ஊடகங்கள், துயர நிகழ்வுகளையே அதிகம் பேசுகின்றன. ஒரு துயர நிகழ்வு நடைபெறும் வேளையில், ஓராயிரம் நல்ல நிகழ்வுகளும் உலகில் நடக்கத்தான் செய்கின்றன. நல்ல நிகழ்வுகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை; துயர நிகழ்வுகளே அதிக சப்தத்தை உருவாக்குகின்றன. இக்கருத்தை மனதில் பதிக்க... காட்டில் ஆயிரமாயிரம் மரங்கள் அமைதியாக வளரும்போது, விழுகின்ற ஒரு மரம் அதிக சப்தத்தை உருவாக்குகிறது என்ற உருவகம் பயன்படுத்தப்பட்டுள்ளது!

ஆலய வழி முறைகள் என்ற பெயரில், அங்குள்ள குருக்கள் இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே குறுக்கிடக்கூடாது என்பது அழகிய ஓர் உண்மை. அதேபோல், உலகில் ஆயிரம் நல்லவைகள் நடந்தாலும், ஓருசில தீயவைகளையே ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என்பதும் நடைமுறை உண்மை. இவ்விரு உண்மைகளையும் நேரடியாகச் சொல்வதைவிட, உருவகங்கள் வழியே சொல்வதால், இவ்வுண்மைகள் நம்மை ஆழமாகச் சென்றடைகின்றன.

உவமைகள், உருவகங்கள் வழியே சொல்லப்படும் உண்மைகளை உலகம் வரவேற்கும் என்பதைக் கூற, யூதப் பாரம்பரியத்தில் கதை ஒன்று உண்டு. நான் இப்போது 'கதை' என்ற வார்த்தையைச் சொன்னதும், நம்மில் பலரது கவனம் இன்னும் சிறிது கூர்மை பெற்றிருக்கும்... இல்லையா? கதைகளுக்கே உரிய சக்தி இது. இதோ அந்த யூதக் கதை:

"உவமைகளுக்கு ஏன் இவ்வளவு சக்தி உள்ளது?" என்று யூத குரு Maggidஇடம் அவருடைய சீடர்கள் கேட்டார்கள். "இக்கேள்விக்கு ஓர் உவமை வழியாக விளக்கம் தருகிறேன்" என்று குரு Maggid தொடர்ந்தார்: "உலகில் உண்மை பிறந்தது. பிறந்ததுமுதல் அது ஆடை எதுவும் அணியாமல், பிறந்த மேனியாய் உலகைச் சுற்றிவந்தது. அதைக் கண்ட அனைவரும் முகம் சுளித்து, ஒதுங்கிச் சென்றனர். யாரும் உண்மையைத் தங்கள் இல்லங்களில் வரவேற்கவில்லை. ஒரு போர்வை கூட இல்லாமல், அப்படியே சுற்றிவந்த உண்மையைக் கண்டு பயந்து ஓடியவர்களே அதிகம்.

தனக்கு நேர்ந்ததைக் கண்டு உண்மை மிகவும் வருத்தம் அடைந்தது. அது இரவும், பகலும் தங்க இடமின்றி அலைந்தது. ஒருநாள் உண்மை, உவமையைச் சந்தித்தது. பல வண்ணங்கள் கொண்ட ஓர் உடையணிந்து மகிழ்வுடன் வந்த உவமை, உண்மையைப் பார்த்து, 'ஏன் இவ்வளவு சோகமாய் இருக்கிறாய், நண்பனே?' என்று கேட்டது. உண்மை உவமையிடம், 'எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. என்னைக் கண்டு எல்லாரும் வெறுத்து ஒதுக்குகின்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை' என்றது. உவமை அதனிடம், 'நண்பா, உன் வயது ஒரு காரணம் அல்ல. பார்... எனக்கும், உனக்கும் ஒரே வயதுதான். ஆனால், எனக்கு வயதாக, வயதாக மக்கள் என்னை இன்னும் அதிகம் விரும்புகின்றனர். இதன் இரகசியம் இதுதான்... மக்கள் எதையும் பல வண்ணங்களில் காண விழைகின்றனர். என்னிடம் உள்ள வண்ண ஆடையொன்றை நீயும் அணிந்துகொள். அதன்பிறகு என்ன நடக்கிறதென்று நீயே பார்' என்று உவமை அறிவுரை சொன்னது.
உவமை சொன்ன ஆலோசனையை உண்மை ஏற்றது. உவமையின் வண்ண ஆடையை உண்மை உடுத்திக்கொண்டது. அன்றிலிருந்து, உண்மையும், உவமையும் இணைபிரியாமல் உலவி வந்தனர். இருவரையும் மக்கள் வெகுவாய் விரும்பி வரவேற்றனர்" என்று குரு Maggid கூறி முடித்தார்.

நேரடியாக, வெளிப்படையாகச் சொல்லப்படும் உண்மைகளை விட, உவமைகள் வழியே வரும் உண்மைகளுக்கு அதிகம் சக்தி உண்டு என்பதை, ஒரு விவிலிய எடுத்துக்காட்டின் மூலம் உணரலாம்.
மன்னன் தாவீது, தன் வீரர்களில் ஒருவரான உரியா என்பவரின் மனைவியை அடைவதற்காக, உரியாவைப் போர்க்களத்தில் இறக்கும்படி ஏற்பாடுகள் செய்தார். இக்குற்றங்களைத் தாவீதுக்குச் சுட்டிக்காட்டும்படி ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தானை அனுப்பினார். நாத்தான், தாவீது செய்த தவறை அவரிடம் நேரில் சொல்லாமல், ஓர் உவமை வழியாக எடுத்துரைக்கிறார். இடித்துரைக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆணி அறைந்ததுபோல், தாவீது உள்ளத்தில் உண்மையை ஆழமாகப் பதிக்கிறார் நாத்தான். விவிலியத்தின் சக்தி வாய்ந்த உவமைகளில் நாத்தான் தாவீதுக்குச் சொன்ன உவமையும் ஒன்று. இதோ அந்த உவமையும் அது சொல்லப்பட்டச் சூழலும் நம்முன் ஒரு கதையாக விரிகிறது:

2 சாமுவேல் 12
ஆண்டவர் நாத்தானைச் தாவீதிடம் அனுப்பினார்: நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: ஒரு நகரில் இரு மனிதர்கள் இருந்தனர். ஒருவன் செல்வன் மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஓர் ஆட்டுக்குட்டி தவிர வேறு எதுவுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர் குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்.

உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும். இரக்கமின்றி அவன் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும் என்று நாத்தானிடம் கூறினார். அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன். நான் உன்னைச் சவுலின் கையிலினின்று விடுவித்தேன். இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்: இது போதாதென்றால் நான் மேலும் உனக்கு மிகுதியாய் கொடுத்திருப்பேன். பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கினாய், அவன் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்!’” என்று கூறினார். அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன் என்று சொன்னார்.

'உன் வீரர்களில் ஒருவரைக் கொன்று, அவர் மனைவியுடன் நீ தகாத உறவு கொண்டாய்' என்று இறைவாக்கினர் நாத்தான் மன்னன் தாவீதிடம் நேரடியாகக் கூறியிருந்தால், தாவீது அந்த உண்மையை ஏற்றுக்கொண்டிருப்பாரா என்பது சந்தேகம்தான். அதற்குப் பதில், செல்லமாய் வளர்க்கப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டிக்கு நேர்ந்ததை நாத்தான் ஓர் உவமையாகச் சொன்னபோது, அது, தாவீதை வெகுண்டெழச் செய்தது. அந்தக் கதையின் வழியாகச் சொல்லப்பட்ட உண்மை தாவீதை மண்டியிடவும் செய்தது. இதுதான், உவமை வழியாக வெளிவரும் உண்மையின் சக்தி.

நாத்தானைப் போல, இறைவாக்கினர் அனைவரின் பணியும் உண்மைகளை எடுத்துரைப்பதில், இடித்துரைப்பதில் அடங்கியிருந்தது. அவர்களில் பலர் தாங்கள் சொல்லவந்த உண்மைகளை உவமைகளாக, உருவகங்களாக, கதைகளாகச் சொன்னார்கள். இறைவாக்கினராக மட்டுமல்லாமல், இறைவாக்காகவே இவ்வுலகில் வாழ்ந்த இயேசுவும் உண்மையைச் சொல்லவே தான் பிறந்ததாகக் கூறுகிறார்:
யோவான் நற்செய்தி 18: 37
இயேசு பிலாத்துவிடம், உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர் என்று கூறினார்.
உண்மையைச் சொல்ல இயேசு பயன்படுத்திய ஓர் அழகிய கருவி... உவமைகள். இயேசு உவமைகளில் பேசிய அழகை அடுத்த வாரம் சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.