2013-01-14 16:01:49

திருத்தந்தை : கிறிஸ்தவர்கள் திருமுழுக்கின் அழகை மீண்டும் கண்டுணர அழைப்பு


சன.14,2013. கிறிஸ்தவர்கள் தங்களின் திருமுழுக்கை நினைக்கவும், மீண்டும் பிறப்பதன் அழகைக் கண்டுணரவும், இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவான இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயத்தில் இருபது குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கி ஆற்றிய மறையுரையில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, புதிதாகப் பிறந்துள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தனது செபத்தையும் ஆசீரையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.
மேலும், நித்திய வாழ்வுக்கானப் பாதையைத் திறந்துவிட்ட ஆன்மீக மறுபிறப்பான திருமுழுக்கை நினைக்குமாறு ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுப்பதாக, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை, ஒவ்வொரு கிறிஸ்தவரும், கடவுளின் அன்பிலிருந்து மீண்டும் பிறப்பதன் அழகை கண்டுணருமாறும், கடவுளின் குழந்தையாக வாழுமாறும் கேட்டுக் கொண்டார்.
கிறிஸ்தவர் என்பது, திருவருளால் கடவுளிடமிருந்து மீண்டும் பிறப்பதை ஈடுபடுத்தும் ஒரு வாழ்வுமுறையைக் கொண்டிருப்பது என்று பொருள் எனவும் அவர் கூறினார்.
திருமுழுக்கு யோவானிடம் இயேசு திருமுழுக்குப் பெற்றது குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இயேசு ஒருபோதும் பாவம் செய்யவில்லையெனினும், தபம் மற்றும் மனமாற்றத்தின் அடையாளமாக, மெசியாவின் வருகைக்காகத் தங்களையே தயார் செய்ய விரும்பிய பலரோடு அவரும் பொதுவில் திருமுழுக்குப் பெற விரும்பினார் என்றும் கூறினார் திருத்தந்தை .
மேலும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட 99வது அனைத்துலக குடியேற்றதாரர் தினம் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, குடியேற்றதாரர்கள் இவ்வுலகில் விசுவாசம் மற்றும் நம்பிக்கையைத் தாங்கிச் செல்கிறவர்கள் என்று கூறினார். உரோமையிலுள்ள குடியேற்றதாரருக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
1914ம் ஆண்டு திருத்தந்தை 10ம் பத்திநாதர் இந்தக் அனைத்துலக குடியேற்றதாரர் தினத்தைத் தொடங்கி வைத்தார்.







All the contents on this site are copyrighted ©.