2013-01-14 16:04:12

313 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுதலை


சன.14,2013. இலங்கையில், இறுதி போரின் பின்னரும், நலன்புரி நிலையத்தில் இருந்த போதும் இராணுவத்தினரிடம் சரணடைந்து ஒரு வருட புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 313 பேர் ஞாயிற்றுக்கிழமையன்று வவுனியாவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் 12,000 பேர் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் இதுவரையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வருபவர்களில் 430 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுப் பயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள 4 யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வேறாக புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்டு வருவதாகப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்ததிருக்கின்றார்.
பொங்கலுக்கு முன்னர் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் இன்னும் விடுதலை செய்யய்படாத நிலையில், அவர்கள் தொடர்ந்து புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த புனர் வாழ்வு ஆணையாளர் நாயகம், அவர்கள் தங்களைத் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்வதற்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுத்திருப்பதாகவும், அவர்களின் சுயவிருப்பத்தின் பேரில் அவர்களுக்குச் சிங்கள மொழி கற்பிக்கப்படுவதாகவும், வேறு புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.