2013-01-12 15:04:45

கற்றனைத்தூறும்... 'செபிக்கும் கரங்கள்'


கிறிஸ்தவ பாரம்பரியத்தின் ஆரம்பத்தில், இரு கரங்களையும் வான்நோக்கி விரித்து செபிப்பதே பழக்கத்தில் இருந்தது. இரு கரங்களையும் சேர்த்து, செபிக்கும் பழக்கம் 9ம் நூற்றாண்டு முதலே ஆரம்பமானது. இப்பழக்கத்திற்கும் உரோமைய கலாச்சாரத்திற்கும் தொடர்பு உள்ளது.
உரோமையர்கள் மத்தியில் ஒருவர் மற்றொருவருக்கு முற்றிலும் பணிந்து போவதைக் குறிக்க, அவர் முன் மண்டியிட்டு, "இதோ என் கரங்கள். நீர் விரும்பினால், இவற்றைக் கட்டிப்போடும்" என்று சொல்லும் பாணியில், இரு கரங்களையும் இணைப்பது வழக்கம். இறைவனுக்கு முன் நமது முழுப் பணிவைக் காட்டுவதற்கு இந்த அடையாளம் பொருத்தமாக இருந்ததால், இதனைக் கிறிஸ்தவ பாரம்பரியம் ஏற்றுக்கொண்டது. இதுவே செபம் செய்யும் ஒரு முறையாகவும் மாறியது.
இரு கரங்களையும் குவித்து செபிப்பதுபோல் வரையப்பட்டுள்ள ஒரு புகழ்பெற்ற ஓவியம் Albrecht Dürer என்ற ஜெர்மானிய ஓவியரால் 1508ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தன் ஓவியக் கல்விக்காக, கல்லுடைக்கும் தொழில் செய்து, உருகுலைந்துபோன தன் சகோதரன் Albertன் கரங்களை அவர் 'கரங்கள்' என்ற தலைப்பில் வரைந்தார். இதுவே, தற்போது உலகெங்கும் 'செபிக்கும் கரங்கள்' (Praying Hands) என்ற பெயரில் புகழ்பெற்றுள்ளது.








All the contents on this site are copyrighted ©.