2013-01-11 15:29:57

மலேசியக் கிறிஸ்தவ சபைகள் : “அல்லா” என்ற பெயரைப் பயன்படுத்த அரசியலமைப்பிலுள்ள உரிமையைச் செயல்படுத்துவோம்


சன.11,2013. மலேசியாவின் செலாங்கர் (Selangor) மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் “அல்லா” என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள தடையை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று CFM என்ற மலேசிய கிறிஸ்தவக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
செலாங்கர் மாநிலத்தின் இவ்வறிவிப்பு குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ள CFM கிறிஸ்தவக் கூட்டமைப்பு, மலாய் மொழி விவிலியங்களில் நானூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக “அல்லா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, தங்களின் கடவுளை “அல்லா” என்ற பெயரில் அழைப்பதற்கு மலேசிய அரசியலமைப்பில் உரிமை உள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
1631ம் ஆண்டிலும் அண்மையிலும் வெளியிடப்பட்ட மலாய்-இலத்தீன், இலத்தீன்-மலாய் அகராதிகள் போன்ற வரலாற்று ஏடுகளையும் மலேசியக் கிறிஸ்தவ சபைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதற்கிடையே, செலாங்கர் மாநில அரசின் இந்த உத்தரவை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.