2013-01-11 15:33:33

சன.12, 2013. கற்றனைத்தூறும்..... பிரமிடு


’பிரமிடு’ என்றால் பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு
கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவர்களின் சடலத்தைப்
பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின்
உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும்
அங்கே இருக்கக்கூடும்” என்பதுதான். ஆனால், வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத்தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்? – என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன.
பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது குஃபூவின் பெரிய பிரமிடு மட்டுமே.
எகிப்தில் கீஸா என்னுமிடத்திலுள்ள மாபெரும் பிரமிடைக் கட்டியதற்காக அழியாப் புகழ்பெற்றவர் எகிப்திய அரசர் குஃபூ (KhufU). இவர் தமக்குக் கல்லறையாக இந்தப் பிரமிடைக் கட்டினார் என்பர். இவர் கி.மு. 26 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இந்த பிரமிடைக் கட்டுமானம் செய்துள்ள துல்லியமும். இதன் பிரம்மாண்ட வடிவளவும் மலைக்க வைக்கின்றன. இந்த மாபெரும் பிரமிடின் முகட்டுப் பகுதியில் 30 அடி நாசமாகி விட்டபோதிலும் இன்றும் கூட இதன் உயரம் 450 அடியாக இருக்கிறது. இது 35 அடுக்கு மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு சமமானது! இது சுமார் 23,00,000 கற்பாளங்களால் கட்டப்பட்டது. இக்கற்பாளங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக இரண்டரை டன் எடை கொண்டவை. இந்த மாபெரும் பிரமிடில், பல உள்ளறைகளும், நடைபாதைகளும் அமைந்துள்ளன.
இந்த மாபெரும் பிரமிடு ஏற்கெனவே 4,500 ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்று வாழ்ந்துள்ளது. நவீன பொறியியல் வல்லுநர்கள் எழுப்பிய கட்டிடங்கள் ஒவ்வொன்றும் இடிந்து மண்ணோடு மண்ணாகிப் போய்விட்ட பின்னரும் கூட நெடுங்காலத்திற்கு இந்த பிரமிடு வாழ்ந்திருக்கும் எனலாம்.
எகிப்தின் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளன. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்களும், அறிவியலாளர்களும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.