2013-01-10 15:30:18

கற்றனைத் தூறும்.... சூப்பர் நோவா(supernova)


சூப்பர் நோவாவை வெடிக்கும் விண்மீன் கூட்டங்கள் எனச் சொல்லலாம். வான்வெளியில் பெரியதாக உள்ள விண்மீன்கள் தங்களின் பரிணாம வளர்ச்சியின் முடிவில், தங்களிடமிருக்கின்ற எரிபொருள் எரிந்து தீர்ந்தபின்னர் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடித்துச் சிதறுகின்றன. இந்த வெடிப்பு, ஹைட்ரஜன் குண்டின் வெடிப்புப் போல இருக்கும். இந்த விண்மீன்களின் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால், இவை கருங்குழிகளாக மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும்முன்னர் அவற்றின் வெளிப்பகுதி, ஈர்ப்புநிலை ஆற்றலால் வெடித்துச் சிதறுகின்றது. இந்த வெடிப்புச் சிதறலை சூப்பர் நோவா என்று அழைப்பது வழக்கம். இலத்தீனில் Nova என்றால் "புதிது" என்று பொருள். விண்ணில் ஒரு புதிய விண்மீன் மிகப் பேரொளியுடன் காணப்படுவதை இது குறிக்கின்றது. மற்ற சாதாரண விண்மீன்களிலிருந்து பேரொளியுடன் காணப்படும் இந்த வகை விண்மீன்களைப் பிரித்துக் காட்டும் விதத்தில் இந்த விண்மீன்கள் சூப்பர் நோவா என அழைக்கப்படுகின்றன. இந்த விண்மீன்கள் வெடிப்பதற்கு முன்னர் வெளிப்படுத்தும் ஒளிர்வு ஆற்றல், சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீனின் துண்டுகள், ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும்கூட, அதாவது முப்பதாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சிதறுகின்றன. மேலும், இந்த வெடிப்புகள், விண்மீன் மண்டலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தக் கூடியவை. ஒரு விண்மீன் குழுமத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. அப்படியானால் இத்தகையதோர் மகா வெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.
Walter Baade, Fritz Zwicky, ஆகிய இருவரும் 1931ம் ஆண்டில் முதன்முதலாக இந்த வெடிக்கும் விண்மீன்களுக்கு சூப்பர் நோவா என்று பெயரிட்டார்கள். சூப்பர் நோவாக்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று டைப் 1ஏ என்பது. இது வெள்ளைக் குள்ளன் என்று அழைக்கப்படும் வயதான விண்மீன் வெடிக்கும்போது நிகழ்வது இது. இன்னொரு வகை சூப்பர்நோவா, தான் இறக்கும்போது பூதாகரமான இளம் விண்மீன்களின் மரணத்தின் போது நிகழ்வது. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இறக்கும் வயதும், இறக்கும் விண்மீன்களின் அளவும்தான். இவ்விரண்டையும் அவற்றின் சூப்பர்நோவாக்களின் அமைப்பை வைத்துக் கண்டுபிடித்துவிட முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.