2013-01-10 15:32:42

உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் எகிப்து நாட்டு இளையோர் கலந்து கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - கர்தினால் Leonardo Sandri


சன.10,2013. எகிப்தில் உள்ள இளையோர் தங்கள் நம்பிக்கையில் வளர்வதற்கு உதவியாக, அவர்களில் பலர் பிரேசில் நாட்டில் நடைபெறும் உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு தான் முயற்சிகள் மேற்கொள்ளப் போவதாக வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் 6ம் தேதி முதல், 11ம் தேதி முடிய எகிப்தில் பயணம் மேற்கொண்டுள்ள கீழைரீதி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, கெய்ரோவில் உள்ள இலத்தீன் ரீதி பேராலயத்தில் இப்புதனன்று ஆயர்கள், பொது நிலையினர் ஆகியோருடன் மேற்கொண்ட ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ், காப்டிக் ரீதி மற்றும் இலத்தீன் ரீதி திருஅவைகள் இடையே வளரவேண்டிய நல்லுணர்வையும், ஒத்துழைப்பையும் குறித்து கர்தினால் தன் உரையில் வலியுறுத்தினார்.
எகிப்து அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே இன்னும் சுமுகமான உறவுகள் வளர்வதையே திருத்தந்தை விரும்புகிறார் என்று கூறிய கர்தினால் Sandri, உறவுகள் வளரவும், அமைதி பெருகவும் நாம் அனைவரும் செபத்தில் இணைவது சிறந்த வழி என்று தன் உரையின் இறுதியில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.