2013-01-08 15:49:49

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் தேசிய குடியேற்றதாரர் வாரம்


சன.08,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சரியான ஆவணங்கள் இன்றி வாழும் ஒரு கோடியே பத்து இலட்சம் குடியேற்றதாரருக்குச் சட்டரீதியாகத் தங்குவதற்கு அனுமதியளிப்பதற்கு உதவும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுமாறு அழைப்பு விடுத்து தேசிய குடியேற்றதாரர் வாரத்தைத் தொடங்கியுள்ளனர் ஆயர்கள்.
குடியேற்றதாரர்கள் பற்றி நினைப்பதற்கும், அவர்கள் குறித்துச் சிந்திப்பதற்கும் இந்தக் குடியேற்றதாரர் வாரம் நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணையத் தலைவரான Los Angeles பேராயர் José Gomez கூறினார்.
இம்மாதம் 6ம் தேதியன்று தொடங்கியுள்ள இந்தத் தேசிய குடியேற்றதாரர் வாரம் குறித்துப் பேசிய பேராயர் Gomez, கத்தோலிக்கர், தங்களது பங்குகளுக்கும் சமூகங்களுக்கும் புதிதாக வரும் மக்களை வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேசிய குடியேற்றதாரர் வாரம் இம்மாதம் 6ம் தேதி முதல் 12ம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகின்றது. இம்மாதம் 13ம் தேதி ஞாயிறு அனைத்துலக குடியேற்றதாரர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.